பக்கம் எண் :

66இலக்கியத் திறன்

Untitled Document

          இலக்கியத்தில்    பலவகையான   உணர்ச்சிகளும் இடம்
பெறுகின்றன,    எனினும்,    மகிழ்ச்சி, வேடிக்கை, கவலையற்ற மன
நிறைவு     முதலியவற்றைவிட,   அச்சம்,  துயரம், கவலை முதலிய
உணர்ச்சிகளை   உடைய   இலக்கியம் விரும்பிப் படிக்கப்படுகிறது.*
ஷேக்ஸ்பியரின்     இன்பியல்    நாடகங்களை    விடத் துன்பியல்
நாடகங்கள்    மிகப்  போற்றப்படுகின்றன. நாடகமேடையில் இன்பக் 
காட்சிகளைவிடத்      துன்பக்  காட்சிகளைக் காணும்போது, மக்கள்
உள்ளம்    ஒன்றியவராய்  உள்ளனர். காரணம் என்ன? கலைஞரின்
உள்ளம்,     அச்சம்    துயரம்  முதலிய உணர்ச்சிகளால் பெரிதும்
தாக்குண்டு     ஆழ்ந்து    உணரும்   நிலை எய்துகிறது. அவர்கள்
படைக்கும்     கலைகளிலும் அந்த உணர்ச்சிகள் ஆழமும் ஆற்றலும
உடையனவாக    அமைகின்றன. ஆகவே கலையை நுகரும் மக்களும் 
அவற்றில் ஆழ்ந்து ஒன்றிவிடுகின்றனர்.

சிறப்பான உணர்ச்சிகளே!

        துன்ப உணர்ச்சிகளிலும் எல்லாத் துன்பமும் கலைக்கு உரிய
ஆழமும் ஆற்றலும் பெறுவதில்லை.எடுத்துக்காட்டாக,  எழுபது வயது
உள்ள முதியவன் ஒருவன் நோய் வாய்ப்பட்டு மாண்டான்   என்றால்,
அந்தத்     துன்ப    உணர்ச்சியைப் புலவர் ஒருவர் பாட்டில்  பாடி
வாழ்வித்தல்    இயலாது. ஆயின்,   முதுமையுற்றவனாயினும்  தசரத
மன்னன்    தன்      மகனது  பிரிவாற்றாத் துயரத்தால் மாண்டதை
வால்மீகியும்    கம்பரும்      தம்    பாட்டுகளால் பாடி அத்துன்ப
உணர்ச்சிக்கு     நிலையான    வடிவம் தந்துள்ளனர்.  தசரதன் தன்
முதுமையில்    நோயுற்று மாண்டிருந்தால்,  அப் பிரிவு பற்றிப் புலவர்
அவ்வாறு   பாடியிருக்க முடியாது. எதிர்பாராத  காரணத்தால் நேர்ந்த
ஏமாற்றமும்    ஆற்றாமையும்  அவனுயிரைக்  கொண்டமையால்தான்,
அவ்வாறு புலவர் பாடமுடிந்தது.

          சங்க    இலக்கியத்தில், நெய்தல்திணைப் பாட்டுகள் சில,
காதலி     தன்னைக்     காதலன்     கைவிட்டதற்காகக் கலங்கிப்
பாடியனவாக உள்ளன.     பிற நாட்டு இலக்கியங்களிலும், காதலரின் ஏமாற்றமும்  கலக்கமும்     பாட்டுகளாக    வடிக்கப் பெற்றுள்ளன.


        * Terror, sadness, anxiety agitate the soul far more
powerfully than joy or security, and so agitated it becomes
the more responsive to the poets art
                        - W.Macneile Dixon, Tragedy, p.157.