நெஞ்சுதான் அதற்குக் காரணம் என்று நெஞ்சைக் கடிந்திடுகிறாள். "நெஞ்சே! இனிமேல் உன்னோடு இருந்து கலந்து எண்ண வர மாட்டேன். உன்னோடு இருந்து எண்ண யார் வருவார்கள்? கொஞ்சம் பொறு. ஊடுவதுபோல் நடிக்கலாம். பிறகு அதன் பயனாக, அவருடைய பேரன்பைப் பெறலாம் என்றால் நீ உறுதியாக இருக்காமல் நெகிழ்ந்து விடுகிறாயே. இனிமேல் உன்னோடு எண்ணிச் செய்வதில் பயன் இல்லை" என்கிறாள். இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்? நெஞ்சே! துனிசெய்து துவ்வாய்காண் மற்று. (குறள், 1294) காதலால் நெஞ்சம் நெகிழாமல் என்ன செய்ய முடியும்? தன் விருப்பப்படி நடக்க முடியாத நெஞ்சின் மேல் சினம் கொண்டு பயன் இல்லை. அதற்கு அறிவான காரணங்களையாவது எடுத்துக் கூறலாம் என்று முயல்கிறாள். "நெஞ்சே! நீ என் நெஞ்சம். எனக்கு நீ இருப்பதுபோல் அவர்க்கும் ஒரு நெஞ்சம் இருக்கிறது. அவருடைய நெஞ்சம் அவரை விட்டு வருகிறதா? அது அவரோடே இருக்கிறது. நீ மட்டும் என்னோடு இருக்காமல் அவரை நாடி அலைவது ஏன்? என்கிறாள், அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது? (குறள், 1291) மீண்டும் சொல்கிறாள் "அவர் நம்மேல் அன்பு இல்லாதவர். அப்படியிருந்தும் அவரைக் கண்டதும், அவரிடம் செல்கிறாயே. நம்மை வெறுக்க மாட்டார் என்று சொல்கிறாயே" என்கிறாள். |