காதலியின் முகம் ஒருநாளும் அவ்வாறு தோன்றாது. அவள் முகத்தின் அழகை யான் ஒருவன் மட்டுமே போற்றிப் பாராட்டும்படியாக, பலர்முன் தன் அழகைப் புலப்படுத்தாமல் அடக்கமான வாழ்க்கை நடத்துகிறாள்" என்று உணர்கிறான். உடனே நிலவைப் பார்த்து, "ஏ மதியே! நீ என் காதலியின் முகத்திற்கு ஒப்பாக விளங்க வேண்டுமானால், இந்தக் குறைக்கு இடம் தராமல் இருக்க வேண்டும்; நீயும் அவள்போல் பலர் காணுமாறு தோன்றாமல் இருக்க வேண்டும்" என்கிறான். மலரன்ன கண்ணாள் முகம்ஒத்தி ஆயின் பலர்காணத் தோன்றல் மதி. (குறள், 1119) ஆகையால் இத்தகைய அடக்கமான வாழ்வைப் பெண்கள் தாமே ஒரு பண்பாக மேற்கொண்டு நடக்கும் பழைய மரபின்படி, கணவர் மனைவியர் மேல் ஐயுற்று ஊடல் கொள்வதற்கு இடம் இல்லை. ஆனால், வெளியுலகக் கடமைகளை மேற்கொண்டு பிறரோடு பழகும் கடப்பாடும்,தன் ஆண்மையும் அழகும் தோன்ற வெளியுலகில் நடமாடும் வழக்கமும் ஆணுக்கு இருந்து வருதலால், அவனுடைய அன்பின் உரிமையில் ஏதேனும் குறை ஏற்பட்டுவிட்டதோ, ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயம் மனைவியின் உள்ளத்தில் நிகழ்வது உண்டு. அதுவே ஊடலாக விளைகிறது. திருவள்ளுவர் காட்டும் காதலர் இருவருமே உயர்ந்த பண்பு உள்ளவர்கள். பெரும்பாலும் மனைவியை மட்டும் உயர்ந்த பண்பு உடையவளாகப் படைத்து, கணவனிடம் சிறு குறை அமைத்துச் செல்வது புலவர் பலர் வழக்கம். திருவள்ளுவர் கணவனையும் குறை இல்லாத உயர் பண்பினனாகவே படைத்துக் காட்டுகிறார். ஆகையால், அவர் |