பக்கம் எண் :

அரசுர் யார்?103

விளக்காக எடுத்துக்காட்டுகின்றது. அவன் குடிகளால் அன்புகூரப்பட்ட செங்கோல் வேந்தனா யிருந்ததனால் அவன் மறைந்ததுமுதல் கடைக்கழகக் காலம்வரை தமிழகம் முழுவதும் ஆண்டிற் கொருமுறை ஓணநாளிற் கொண்டாடப் பெற்றான். இன்று அது அவன் பிறப்பு நாடாகிய மலையாள நாட்டில்மட்டும் நிகழ்ந்து வருகின்றது.

     மாங்குடி மருதனார் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்மேல் மதுரைக் காஞ்சி பாடியது, ஓர் ஓணத்திரு நாள் என்று கூறப்பெறும், அச் செவியறிவு நூலை "ஓணத்திருநாளில் அவர் கூறியதற்கு அரிய கருத்து ஒன்றுண்டு, மூவுலகையும் அடக்கியாண்ட மாவலி சக்கரவர்த்தியை ஒடுக்க வேண்டி வாமனாவதாரத்தைக் கொண்டாடுவதே அத் திருவிழா என்பர். அம் மாவலி உத்தம குணச்செயல்கள் உடையவனா யினும், தன் ஆசுர வியல்பால் தேவர் முதலியவர்க்கு இடுக்கண் விளைவித்து வந்தவன். அதனால் கடவுளே அவதாரமூலம் அவன் செருக்கை ஒடுக்கநேர்ந்தது. எத்தனைப் பெருவலியும் செல்வங்களும் உடையவனாயினும் தெய்வ பலம், இல்லையேல் அவையாவும் சிதைந் தொழியும் என்ற உண்மையைக் குறிப்பிடுவது அத் திருநாள் என்று கூறுவர் மு. இராகவையங்கார், இது ஆராய்ச்சியிலுள்ள தமிழ்ப் புலவர் கருத்தன்று. சொல் தவறாமையினாலே மாவலி மாய்ந்தான் என்றும் தவறியிருப்பத் தப்பியிருப்பான் என்றும் முடிவு கொள்வதற்கே குறள் தோற்றரவுக் (வாமனன்) கதை இடந்தருகின்றது. கொடையும் வாய்மையும் வழுவிய அறங்களேயன்றி வழுவாய் (பாவம்) ஆகா. அவற்றை ஊக்குவதன்றித் தளர்விப்பது இறைவனுக்கு ஒத்ததன்று. மேலும் மாபலி கொடை வழங்கிய சமையம் வேள்வி என்று கூறப்படுவதால் அது தெய்வப் பற்றைக் காட்டுவதுடன் ஆரிய முறைப்படி சீரிய திருச் செயலுமாகின்றது. ஆதலால் தெய்வத்துக்கு மாறாக அவன் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. தேவர் முதலியவர்க்கு இடுக்கண் விளைவித்தான் என்று வேகடையாய்க் கூறுவது பொருந்தாது. தேவர் யார்? அவருக்கு என்ன தீங்கு செய்தான்? மண்ணுலக வேந்தன் விண்ணுலகத் தேவருக்கு எங்ஙனம் தீங்கு செய்யமுடியும்? இன்னோரன்ன வினாக்கட்கு விடையின்மையால் அக் கூற்று பொருளற்ற தெனக் கூறி விடுக்க. குடிகளை அன்பாய் அரவணைத்துக் காப்பதே அரசன் கடமை. ஆண்டிற் கொருமுறை ஓணநாளில் மாவலி தன் குடிகளைக் கண்டு போக இறைவனிடம் ஈவு (வரம்) பெற்றான் என்றும் மலையாளியர் அவனைக் கண்டு களிப்பதுபோல் கொண்டாடுகின்றனர் என்றும் கூறப்படுவது மாவலியின் மாபெருந் தகைமையைக் காட்டுமன்றோ!
     இதுகாறும் கூறியவற்றால் அசுரர் தமிழரின் முன்னவரே யென்றும், தீயவரல்ல ரென்றும், பாகதத்திற் கொள்வது போல், சுரையென்னும் கள்ளை யுண்டவர் சுரர் என்றும் அதை உண்ணாத சான்றோரை அசுரர் என்றும் கூறுவதே பொருத்தமென்றும் தெரிந்து கொள்க.