பக்கம் எண் :

125

மாந்தன் செருக்கடக்கம்

     இவ் வுலகிலுள்ள உயிரினத் தொகுதியுள், மாந்தன் நாகரிகப் பண்பாட்டு வளர்ச்சிக்கேற்ற மதியுடைமைபற்றி உயர்ந்தவனே. அதனால், அவன் தன்னை உயர்திணை என்று கூறிக்கொண்டது உத்திக்கும் பொருந்துவதே. ஆயினும் அவன் தன்னை இறப்ப மதித்து, "இயலாது" என்னும் சொல் என் அகரமுதலியில் இல்லையென்றும், எண்பெருஞ் சித்துக்களை அடைவேன் என்றும், இறைவனே இல்லை யென்றும், உலக முழுவதையும் ஒரே குண்டில் ஒழித்துவிடுவேன் என்றும், தருக்கியும் செருக்கியும் தட்டுக்கெட்டுத் தடுமாறிக் கெடாவண்ணம், அவன் அவிந்தடங்கி அறிவுபெறும் வகையில், அஃறிணையுயிர்கட்கும் சிற்சில பேறுகளை ஒத்த அளவிலும் உயர்ந்த அளவிலும் இறைவன் அருளி யிருப்பது மிகமிகக் கவனிக்கத்தக்கது.

1 நீடுவாழ்வு

     மாந்தன் இவ்வுலகில் அடையும் பேறுகளுள் நீடுவாழ்வும் ஒன்றாம். இன்பச் சிறப்பு அதன் மிகுதியை மட்டுமின்றி நீட்சியையும் தழுவும். உயிரினங்களின் வாழ்நாட் பேரெல்லையை நோக்கின், இனம் உயர வுயர வாழ்நாள் குறுகுவதைக் காணலாம்.
        உயிரினம்                     வாழ்நாட் பேரெல்லை (ஆண்டு)
        மாந்தன்                                 100
        யானை                                  100
        ஆமை                                  120
        முதலை                                 300
        திமிங்கிலம்                              500
        செம்மரம் (American red-wood)            4000
     கலிபோர்னியாவிலுள்ள ஒரு மரத்தின் (sherman) அகவை ஐயாயிரம் ஆண்டுவரை மதிக்கப்பெறுகின்றது.

"மனிதர்க்கு வயது நூறல்ல தில்லை"

     என்று கபிலர் கூறினாரேனும், இக் காலத்தில் அறுபதாண்டிற்கு மேற்பட்ட தெல்லாம் இறைவனால் அளிக்கப்பெறும் நீட்டிப்பென்று கருதப்படுகின்றது.