பக்கம் எண் :

உரையாசிரியர்கள்18

எனவும், தொல்காப்பியர் கூறியுள்ளதை நோக்கின் அவர் காலத்திற்கு மிக
முற்பட்ட காலத்திலேயே காண்டிகையும் விருத்தியும் ஆகிய உரை வகைகள்
வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாம்; என்னை? இலக்கியம்
கண்டன்றி இலக்கணங் கூறல் இயலாமையின் என்க.

     உரை செய்யும் முறையைத் தெரிவித்த தொல்காப்பியர் நூலுக்கு
அத்தகைய உரைகள் தோன்றுதல் இயல்புதானே! சிலவகை எழுத்தில்
பலவகைப் பொருளைச் செறித்து இனிது விளக்கும் சூத்திரயாப்பினால் இயன்ற
இலக்கண நூல்கள் மிக்க நுண்ணறிவுடையார்க்கன்றிப் படித்தவுடன் பொருள்
விளங்காமையின் அவற்றிற்கு உரை தோன்றுதல் இன்றியமையாததும் ஆயது.
இதனால், உரை நூல்களின் தேவை முதற்கண் சூத்திரயாப்பினால் அமைந்த
இலக்கண நூல்களுக்கே ஏற்பட்டது என்பது தெளிவாகின்றது.

     இவ்வாறு இலக்கண நூல்கள் உரைநூல்களால் நன்கு விளக்கம் பெற்று
மக்களிடையே நன்மதிப்புப் பெற்று நிலவுவதைக் கண்ட அறிஞர்கள் சிறந்த
இலக்கிய நூல்களுக்கும் இத்தகைய உரைகள் இருப்பின் அவை மக்களிடையே
மதிப்புப் பெற்று நெடிது வாழும் என்று கருதுவாராயினர். திருக்குறள்,
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற இலக்கியங்கள் இவ்வாற்றான்
உரைநூல்களால் விளக்கம் பெற்று மக்களிடையே நல்வாழ்வு பெற்றன.
சிலப்பதிகாரம், அகநானூறு, பதிற்றுப் பத்துப் போன்ற இலக்கியங்கட்கு,
எளிதில் விளங்காத இடங்களை மட்டும் விளக்கும் குறிப்புரையே முதற்கண்
தோன்றியது. அக்குறிப்புரையாலும் விளக்கம் பெறாத மக்கள் உளங்கொளப்
பின்பு பொழிப்புரையும் விளக்க உரையும் தோன்றலாயின. இன்றைய
நிலையில் உரையில்லாத நூல்களே இல்லை என்னுமாறு உரை நூல்கள்
வளர்ச்சி பெற்று வருகின்றன.

     இங்ஙனம் வளர்ச்சி பெற்றுவரும் உரை நூல்களை இயற்றிய
ஆசிரியர்கள் மிகப்பலராவர். இடத்தானும் காலத்தானும் வேறுபட்ட
இவ்வுரையாசிரியர்களின் வரலாறு முழுமையானதாக இதுகாறும் வெளிவராதது
தமிழ் மொழிக்கு ஒரு குறையாகவே இருந்தது. அந்த குறை நீங்கத் திரு
மு.வை. அரவிந்தன், ‘உரையாசிரியர்கள்’ என்ற பெயரால் ஒரு விரிவான
அரிய ஆராய்ச்சி நூலைத் தந்துள்ளார்கள். இறையனார் களவியல்
உரையாசிரியர் முதலாக இன்று வாழும் உரையாசிரியர்கள் வரையில் உள்ள
பல உரையாசிரியர்களைப் பற்றியும் தம் நுண்மாண் நுழைபுலங் கொண்டு
ஆராய்ந்து அரிதின் இயற்றிய