வேண்டும் என்பதையும் நச்சினார்கினியர் எவ்விடத்தும் மறந்து விடவில்லை. எழுத்ததிகாரத்தில் செய்யுளியலை நினைவூட்டுகிறார். எழுத்ததிகாரத்தின் முற்பகுதியைப் பிற்பகுதியுடன் தொடர்புபடுத்துகின்றார். சொல்லதிகாரத்தில் கிளவியாக்கத்தையும் எச்சவியலையும் இணைத்துக் காட்டுகின்றார். உவமவியல் செய்யுளில் மெய்ப்பாட்டியல் மூன்றையும் ஊடுருவி நோக்கி ஒப்புமை காண்கின்றார். இறைச்சி உள்ளுறை உவமம் மாட்டு ஆகியவை பற்றிய கருத்துகள் வேறு வேறு இடங்களில் இருப்பினும் அவற்றைத் தொகுத்து ஆராய்கின்றார். இவையேயன்றி, பிற்காலத்து இலக்கண நெறிகளையும், கொள்கைகளையும் பல இடங்களில் ஆராய்கின்றார். பிற்கால யாப்பு நூலாரைப் போல, தொல்காப்பியர் தளையைச் செய்யுள் உறுப்பாகக் கொள்ளாமைக்கு உரிய காரணத்தை, செய்யுளியலின் தொடக்கத்தில் ஆராய்கின்றார். அவ்வியலின் இறுதியில் சித்திரகவிக்கு இலக்கணம் கூறாமையைச் சுட்டுகின்றார். முழு நோக்குடன் தொல்காப்பியத்திற்கு உரை கண்ட நச்சினார்க்கினியர், எல்லா உரைநெறிகளையும் போற்றியுள்ளார். நூற்பா அமைப்பை ஆய்தல் நல்ல பாடம் காணுதல் நூற்பாவுக்கு வினைமுடிபு காட்டுதல் வைப்பு முறை ஆய்தல் கருத்துகளைக் கணக்கிட்டு மொழிதல் சொற்களின் வடிவமும் பொருளும் ஆய்தல் நுண்பொருளை வெளிப்படுத்துதல் நயவுரை கூறுதல் தக்க மேற்கோள் காட்டுதல் ஆகிய பலவகையான உரைநெறிகளை இவர் மேற்கொண்டுள்ளார். நூற்பா அமைப்பை ஆய்தல் நூன் மரபில் (3) அவற்றுள், அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப என்னும் நூற்பா உரையில், “அவற்றுள், அ இ உ - என்பன சொற்சீரடி” என்று இவர் கூறுவதால் அந்நூற்பாவை, |