பக்கம் எண் :

உரையாசிரியர்கள்36

     இவற்றை எல்லாம் சிந்திக்கும் போது, உரையாசிரியர்களைப் பற்றிய
ஆய்வு தொடுவானம் போல விரிந்து செல்வதை உணர முடிகின்றது. உரை
ஆய்வின் எல்லைக் கோடும், எல்லைக் கல்லும் மாறிக் கொண்டே இருப்பதை
அறிய முடிகின்றது.

     ஆராய்ச்சி முடிவற்றது. ஆனால், ஏதேனும் ஒரு முடிவுக்கு வராமல்
இருப்பது ஆராய்ச்சி ஆகாது.

     காலம் இடம் என்ற மிகப் பெரிய இரண்டு வரையறைக்குள் அமைகின்ற
சூழ்நிலையின் இயல்புக்கு ஏற்றவாறு, ஒவ்வொரு கால கட்டத்திலும் -
ஒவ்வோர் இடத்திலும் ஆராய்ச்சி ஏதேனும் ஒரு முடிவுக்கு வருகின்றது.
காலமும் இடமும் மாறி, சூழ்நிலை வேறுபடும் போது முன்னைய ஆராய்ச்சி
தன்னைத் தானே மாற்றிக் கொண்டு புதியனவற்றை ஏற்கும் பக்குவத்தைப்
பெறுகின்றது. அதனால், ஆய்வுலகில் பழையன கழிந்து, புதியன புகுந்து
மறுமலர்ச்சி ஏற்படுகின்றது. ஆனால் சிலவகை ஆய்வுகள் என்றும் மாறாத -
மாற்ற முடியாத விதிகளாக நிலைபெற்று விடுகின்றன. அவ்விதிகளை வலிமை
வாய்ந்த கடைக் காலாகக் கொண்டு புதிய ஆய்வுகள் ஓங்கி வளர்கின்றன.

     சில போது, ஆய்வுலகில் பாதைகள் முடிந்தாலும் பயணங்கள்
முடிவதில்லை. பாதை ஓர் இடத்தில் முடிகின்ற போது, பயணம் வேறு
பாதையைத் தேடிக் கொண்டு தன்பணியைத் தொடர்கின்றது; உண்மையைத்
தேடிக் கொண்டு தொடர்ந்து செல்கிறது.

     உலகத்தைச் சுற்றி வருபவர், தாம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும்
வந்து சேர்வதைப் போல், சில புதிய ஆய்வுகள் தொடங்கிய இடத்திற்கே
மீண்டும் வந்து சேர்ந்து, ஆய்வுப்பணி வட்டமான பாதையில் பயணம்
செய்வதை உணர்ந்து அமைதியடைகின்றன.

     தமிழ் மக்களின் தவப்பயனாகத் தமிழாய்வு உரையாசிரியர்களின்
சமயம் காலம் ஆகியவை பற்றி ஆய்வதை நிறுத்திக் கொண்டது. மறுப்பும்
சேர்ந்தபின், அவற்றைக் கைவிட்டது. ஆய்வுலகம், ஆக்கப்பணிகளில்
ஈடுபட்டுச் சாதனைகளைப் புரிந்து வருகிறது. உரைவளம் கண்டு, உரை
வேற்றுமைகளை உற்றுநோக்கி, ஒப்பியல் ஆய்வுக்கு வழிவகுத்து, திறனாய்வுக்
கோட்பாடுகளை உருவாக்கி வருகின்றது.

     ஆய்வு என்பது, முதியவர்களும் ஓய்வு பெற்றவர்களும் செய்ய
வேண்டிய பணி என்ற நிலைமை மாறி, இளைஞர்களும்