அன்பர் ஆகுநர் அன்றி மன்பதை உலகின் மற்றையர் இலரே என்று திருவாசகத்தின் பெருமையைப் பாடுகின்றார். திருவாசகத்திற்குப் பழைய உரைகள் இல்லை என்றாலும் சைவப் புலவர்கள் தாம் இயற்றிய செய்யுள் நூல்களிலும், உரை நூல்களிலும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் திருவாசகத்தின் சில பாடல்களுக்கு உரையும் விளக்கமும் கூறியுள்ளனர். குமர குருபரர், மாதவச் சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர், சிதம்பர முனிவர், மதுரைச் சிவப்பிரகாசர், வெள்ளியம்பலவாணர் ஆகிய சிவனருட் செல்வர்கள் தாம் இயற்றிய செய்யுள்களிலும், உரைகளிலும் திருவாசகப் பாடல்கள் பலவற்றிற்கு உரையும் விளக்கமும் கூறியுள்ளனர். பரஞ்சோதி முனிவரும், பெரும்பற்றப்புலியூர் நம்பியும் தம் திருவிளையாடற் புராணங்களில் திருவாசகத்தின் சில பாடல்களின் உட்பொருளை விளக்கியுள்ளனர். கடவுள் மாமுனிவர் திருவாதவூரர் புராணத்திலும், மீனட்சிசுந்தரம் பிள்ளை திருப்பெருந்துறைப் புராணத்திலும் திருவாசகப் பகுதிகள் சிலவற்றிற்கு உரை இயற்றியுள்ளனர். திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் திருவாசகத்திற்கு உரை எழுதத்தொடங்கி நிறுத்திவிட்டார் என்று செவிவழிச் செய்தி ஒன்று கூறுகின்றது. திருவாசக வியாக்கியானம் திருவாசக வியாக்கியானம் என்னும் ‘திருவாசக அனுபூதி உரை’ சீர்காழித் தாண்டவராயரால் எழுதப்பட்டது. இவ்வுரை “கலியுகம் 4945, சாலிவாகனம் 1756 இவையிற் செல்லும் செயவருடம் மகர மாசம் பூச நாளில் தில்லை அம்பலவாணர் சந்நிதியில் துவங்கி, அதற்கடுத்த மன்மத வருடம் மார்கழி மாதம் 10உ பன்னிரு திருநாமம் பெற்ற சீகாழியில் எழுதி முற்றுப் பெற்றது” என்று சிறப்புப் பாயிரவுரை கூறுகின்றது. உரைப் பாயிரத்தில் தாண்டவராயர், “இவ்வநுபூதியுரை சம்பிரதாய உபதேசமாகும். திருவாதவூரடிகளாகிய மாணகிக்கவாசக சுவாமியார் அருளிச் செய்த இவ்வருள் நூலிற் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து பொதியாசலமுனி அருளிய கருத்தநுபூதியான சூத்திரங்களை எமது குரவரான குரு சுவாமி அவை விளங்கப் பொழிப்புரை அநுபூதியை அடியேற்கு உபதேசித்தபடி அடியேன் கருத்தில் உறைவதான திருவருளையும் கலந்து சிவனடியார்கள் அனுக்கிரகப்படி பத வியாக்கியானமும் அவைகட்கு நுட்பமும் விரிவும் எழுதியுள்ளேன்” என்று உரைக் |