6. இல்லறம் துறவறம், இம்மை மறுமை, போகம் மோக்கம் என்றாற் போலப் புகழ் முன் கூறி, ஞானத்தைப் பின் கூறல் மரபாம்: அவ்வாறன்றி ஞானமும் புகழும் என்றல், முறை பிறழ வைத்ததாம். 7. ஞானமும் புகழும் உள எனப் பன்மையால் கூறாது, ஞானமும் புகழும் என்னும் இரண்டு எழுவாய்க்கு ‘உண்டு’ என ஒருமைப்பாலால் கூறியது வழுவாம். 8. ‘உண்டு’ எனவே அமைந்திருப்ப ‘ஆம்’ என்பது நின்று பயனின்மையாம். 9. வீடு என்று ஒழியாது, ‘உயர் வழியது’ என்றல் மிகை படக் கூறலாம். 10. அன்றியும் வீடாகிய உயர்வழியது என இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்ளின் ஏற்றிடபம், யாட்டேறு என்றாற்போல, வீட்டுயர் வழியது எனச் செய்கைப்பட்டுப் புணர்வது அல்லது, ‘வீடுயர் வழியது’ எனப் புணராதாம். 11. கைகூடும், உண்டாம், நோக்கும் என்பனவற்றைத் தன் வினையாகக் கூறி, ஆக்கும் என இஃது ஒன்றனையும், பிறவினையாகக் கூறல் வழுவாம். 12. வேரி இல்லாத கமலம் சில உள ஆயின், அவற்றை நீக்குதற்கு, ‘வேரியங் கமலம்’ என விசேடித்தல் அமையும்; அவ்வாறு இன்மையின், ‘வேரியங் கமலம்’ எனப் பயனில் விசேடம் அடுத்தல் வழுவாம். 13. கமலை குடிகொண்டு உறையும் என்னாது, கடைக் கண்ணால் சிறிது பார்க்கும் என்பது பட நோக்கும் என்றமையால், அற்பச் செல்வம் எய்தும் எனப் பொருள் தருதலின் சிறப்பிலதாம். 14. நிலைபேறு இன்றி, அழிவுறும் அரக்கரை நீடிய அரக்கர் என்றல் பொருந்தாதாம். 15. அரக்கர் எனவே அமைந்து இருப்ப, சேனை என்றல் மிகையாம். 16. அன்றியும், அரக்கரது சேனை நீறுபட்டு ஒழிந்த தன்றி அரக்கர் நீறுபட்டிலர் எனவும் பொருள் தருதலின் மயங்க வைத்தலாம். 17. நீறுபட என்னாது, ‘நீறுபட்டு ஒழிய’ என்றல் மிகையாம். 18. நீறுபட்டு ஒழிந்த பின் வாகைசூடுதலை, ஒழிய வாகை சூடல் என்றல் வழுவாம். |