பக்கம் எண் :

உரையாசிரியர்கள்560

     ‘இறப்பு, நிகழ்வு, எதிர்வு என முறையிற் கூறாராயது காலமென ஒரு
பொருள் இல்லை என்பாரும், நிகழ்காலம் ஒன்றுமே என்பாரும், இறந்ததும்
எதிர்வதூஉம் என இரண்டென்பாரும், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூன்று
என்பாரும் இப் பகுதியார் ஆசிரியர். அவருள் காலம் இல்லை என்பார்,
ஒருபொருள் நிகழுமிடத்துப் பொருண்மைப் பேறல்லது காலம் என்று
வேற்றுணர்வும் பிறவும் படுவதில்லை என்ப. இனி, காலம் ஒன்று என்பார்,
யாறு ஒழுகும், மலை நிற்கும் என உள்ள பொருள் ஒரு காலத்தானே
சொல்லப்படும், பிறிதில்லை என்ப. இறப்பும் எதிர்வும் என இரண்டென்பார்
கோல் ஓடும் கால் சென்றதூஉம் அன்றே? அதனால், நிகழ்வில்லை என்ப.
மூன்று என்பார் நெருதல், இன்று நாளை என்றும்: வந்தான், வாராநின்றான்
வருவான் என்றும் இவ்வாறு சொற்கள் மூன்று காலமும் காட்டுதலின் மூன்று
என்ப.’

     இவ் விளக்கம் புலமைக்கு விருந்தாய் அமைகிறது.

     ‘ந’ என்பது சிறப்புப் பொருட்டு: பெயர் முன் அடுத்து வரும்; நக்கீரர்,
நச்செள்ளையார் நப்பாலத்தனார், நப்பின்னை, நந்நாகனார், நக்கடகம் எனக்
காண்க” என்ற விளக்கம் நினைத்து மகிழ்தற்குரியது (420).

     உரிச்சொல்லை விளக்கும்போது, ‘உரிய சொல் யாது, அஃது
உரிச்சொல்’ என்று கூறுகின்றார்.

புலவரைப் போற்றுதல்

    புலவர் பெருமக்களின் பெயர்களைச் சிறப்பான அடைமொழிகள் தந்து
பெருமையுடன் குறிப்பிடுவதும் இவர் இயல்பு.

    மிகத் தெளி கேள்வி அகத்தியனார்
    ஒல்காப் புலமைத் தொல்காப்பியனார்
    அளவறு புலமை அவிநயனார்
    புவிபுகழ் பெருமை அவிநயனார்
    உளங்கூர் கேள்வி இளம்பூரணர் எனும்
         ஏதமில் மாதவர்
    தண்டலங் கிழவன் தகைவரு நேமி
         எண்டிசை நிறைபெயர் இராச
         பவித்திரப் பல்லவ தரையன்

என்பவை இவர் கூறும் சிறப்பு மொழிகளில் சில.

நூல்கள்

    இவர் தம் காலத்தில் வழங்கிய பல நூல்களைக் குறிப்பிடுகின்றார்.