இமயச்சிகரங்கள்; சமயம் அரசியல் முதலியவற்றின் தாக்கத்தால் கலங்காத கடல்கள். இந்தநூல் இத்தகைய சிறப்பியல்புகளை உடைய உரைகளின் நலன்களையும், அவ்வுரைகளைத் தந்த உரையாசிரியர்களின் சிறப்பையும் ஆய்வு நோக்கில் இந்த நூலில் தந்துள்ளேன். ‘உரையாசிரியர்கள்’ என்ற தலைப்பை உடைய இந்த நூல், உரைகளின் ஆய்வையும் உள்ளடக்கியதாகும். இது மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. அவை, 1. அறிமுகம் 2. ஆய்வு 3. நோக்கு என்பன. ‘அறிமுகம்’ என்ற முதற்பகுதி, உரைகளைப் பற்றிய பொதுவான செய்திகளைத் தொகுத்து உரைக்கின்றது. ‘ஆய்வு’ என்ற இரண்டாம் பகுதி, மூல நூலை அறிமுகப்படுத்தி, உரையாசிரியர்களின் வரலாற்றைக் கூறி, அவர்களின் உரைகளை ஆய்ந்துள்ளது. தேவையான இடங்களில் பதிப்புகளையும் நினைவுபடுத்துகின்றது. ‘நோக்கு’ என்ற மூன்றாம் பகுதி, எல்லா உரைகளையும் சிங்க நோக்காக முன்னும் பின்னும் நோக்கி, ஒட்டு மொத்தமாக மதிப்பிடுகின்றது. இந்த நூல், வருங்கால ஆய்வாளர்களின் சிந்தனைக்குத் தூண்டு கோலாய் - ஆய்வில் தளர்ச்சி ஏற்படும் இடங்களில் ஊன்று கோலாய் - சரியாக மதிப்பிடும் அளவு கோலாய்ப் பயன்படும் என்று நம்புகிறேன். ஒன்றே நினைந்திருந்தேன் ! ஒன்றே துணிந்தொழிந்தேன் ! ஒன்றே என் உள்ளத்தில், உள்ளடைத்தேன் ! - காரைக்கால் அம்மையார் |