பக்கம் எண் :

625ஆய்வு

    கதி்ர்ஒன்று இருந்தெனக் காண்டக இருந்து
    தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய உத்தமன்

என்று இவரைக் கூறுகின்றது.

உரையின் இயல்பு

    உரை மிகவும் எளிமையும் தெளிவும் உடையது. இறையனார்களவியல்
உரையின் சார்பு சில இடங்களில் காணப்படுகின்றது. இளம்பூரணர் உரையின்
இயல்புகளை எல்லாம் இவ்வுரையிலும் காணலாம். அடக்கமும் அமைதியும்
இவரது உரைநடையில் காணப்படுகின்றன. சூத்திரங்களின் பொழிப்புரைக்குப்
பின் மிகச் சுருக்கமாக விளக்கமும் அருஞ் சொற்பொருளும் இலக்கண
ஒப்புமையும் தருகின்றார்.

மேற்கோள் பாடல்கள்

    இன்று அச்சில் உள்ள உரையில் அகப்பொருள் இலக்கணத்திற்கு
இலக்கியமாகத் தஞ்சைவாணன் கோவைச் செய்யுட்கள் யாவும்
காட்டப்பட்டுள்ளன. அவையேயன்றிச் சங்க நூல்களிலிருந்து ஏற்ற பாடல்கள்
தரப்படுகின்றன.

     நம்பி அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாக எழுதப்பட்ட
நூல், தஞ்சைவாணன் கோவை. ஆதலின் நூலாசிரியரே உரை எழுதிய
அகப்பொருள் இலக்கணத்தில் மேற்கோளாகத் தஞ்சைவாணன் கோவைப்
பாடல்கள் இடம் பெற முடியாது. காலப்போக்கில் யாரோ ஒருவர்
தஞ்சைவாணன் கோவைப் பாடல்களை மேற்கோளாக அமைத்திருக்க
வேண்டும்.

     திருக்கோவையார், திருவாரூர்க் கோவை ஆகியவற்றிலிருந்தும்
மேற்கோள் தரப்படுகின்றன. இவையும் பின்னரே சேர்க்கப்படிருக்க வேண்டும்.

     இதன் உரையில், “இவற்றுள் சான்றோர் செய்யுள் இல்லாதவற்றிற்குச்
சூத்திரம் தன்னையே இலக்கியமாகக் கொள்க” (சூத்-146) என்று
குறிப்பிடப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் மேற்கோள் எல்லாவிடங்களிலும்
தரப்பட்டே உள்ளன.

     “நடுங்க நாட்டத்திற்குச் சான்றோர் செய்யுள் இல்லை” என்று உரை
(சூத்-139) கூறிய போதிலும், “பால்போல் மொழிவஞ்சி” என்ற தஞ்சைவாணன்
கோவைப் பாடல் (63) மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

     இவற்றை எல்லாம் நோக்கும்போது தஞ்சைவாணன் கோவைப்
பாடல்கள் பிற்காலத்தில்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு
வரவேண்டியுள்ளது