இப்பகுதியில் அவ்வுரை என்று இவர் குறிப்பிடுவது, இலக்கண விளக்க ஆசிரியர் தம் நூலில் மேற்கோளாக நன்னூல் சூத்திரங்களைக்கொண்டு அவற்றிற்கு உரைத்த உரையாகும். இலக்கண விளக்க ஆசிரியரை இவர், மேலும் சிலவிடங்களில் குறிப்பாக மறுத்துள்ளார். “அ இ உ முதல் தனிவரின் சுட்டே - நன்னூலார்க்குப் பின்னூலார் இச்சூத்திரத்திற்கு அளவிறந்த குற்றம் கூறினார்” என்றும், “(நன்னூல்) சூத்திரம் பிழைப்பட்டதாகக் கருதித் திருத்தி, திருத்தினம் என்றும் இன்னும் பல கருதி மயங்குவர்” (இலக்-117) என்றும் இவர் மறுக்கின்றார். இலக்கணத் தொடரும் விளக்கமும் வேற்றுமை, இரட்டைக் கிளவி, தொகை நிலை ஆகியவற்றிற்குப் பொருளும் விளக்கமும் தருகின்றார். வேற்றுமை: “உருபு ஏற்றதனையும், உருபையும் உருபு நோக்கி வந்ததனையும் வேற்றுமை என்பர். வேறுபடுதலால் வேற்றுமை, வேறுபடுத்தலால் வேற்றுமை, வேற்றுமையை முடித்தலால் வேற்றுமை என்று பொருள் உரைப்பர்” (இலக்-20). இரட்டைக் கிளவி: “இரட்டைக் கிளவியைப் பிரித்தது என் எனின், இது இலை இரட்டை, பூவிரட்டை, காய் இரட்டை, விரல் இரட்டைபோல ஒற்றுமைப்பட்டு நிற்றலானும்; அவ்வைந்தும் மக்கள் இரட்டை, கால் இரட்டை போல வேற்றுமைப்பட்டு நிற்றலானும் என்க” (இலக்-120). தொகை நிலை தொகா நிலை: “தொகைநிலை தொகா நிலை எனும் சொற் பொருளான் மாறுபடு புலவர்கள் மூவர் என்க. 1. நிலைமொழி வருமொழிக்கு இடையே மறைந்து நிற்றல் வெளிப்பட நிற்றல் என்றும், 2. நிலைமொழி வருமொழிகள் கூடிநிற்றல் பிரிந்து நிற்றல் என்றும், 3. நிலைமொழி வருமொழிகள் ஒன்றாய் நிற்றல் பலவாய் நிற்றல் என்றும், பொருள் கூறி, ஒருவரை ஒருவர் மறுப்பர். அவை விரிக்கின் பெருகும்.” போலி எழுத்து போலி எழுத்துப் பற்றி இவர் கொண்டுள்ள கருத்து வேறுபட்டது. சிவஞான முனிவர் சந்தியக்கரம் என்று கொண்டதனை இவர் போலி எழுத்து என்பர். |