மாகறல் கார்த்திகேய முதலியார் (1857-1916) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேட்டூரில் பிறந்தவர். இவர். ஆத்திசூடி உரை, முதற் சூத்திர விருத்தி எழுதியுள்ளார். செல்வக் கேசவராய முதலியார் (1864-1921) சென்னைக்கு அருகில் உள்ள திருமணம் என்னும் ஊரில் பிறந்தவர். ஆத்திசூடி, நல்வழி முதலிய நீதி நூல்களுக்கு உரை எழுதினார். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் சிலவற்றை உரையுடன் பதிப்பித்தார். தி. த. கனகசுந்தரம் பிள்ளை (1863-1922) இலங்கை-திரிகோண மலையில் பிறந்தவர். ஆறுமுக நாவலர்க்குப் பதிப்புப்பணியில் உதவியாக இருந்தவர். சுன்னாகம் குமாரசாமிப் பிள்ளையுடன் சேர்ந்து நம்பியகப் பொருளுரைக்குப் புத்துரை கண்டார். கம்பராமாயணம் பால காண்டத்திற்கு உரை இயற்றியுள்ளார். சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (1855-1922) இவர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பிறந்தவர். இவர் உரை கண்ட நூல்கள்: கம்பராமாயணம் - பாலகாண்டம்; நீதி நெறி விளக்கம்; தண்டியலங்காரம்; யாப்பருங்கலக் காரிகை; கலைசைச் சிலேடை வெண்பா. ஆ. சிங்காரவேலு முதலியார் (1855-1934) தொண்டை மண்டலம் பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர்; சென்னைப் பல்கலைக் கழகத்தில்-பேரகராதிக் குழுவில் பணியாற்றிவர். அபிதான சிந்தாமணி என்னும் அரிய கலைக்களஞ்சியத்தை எழுதி வெளியிட்டவர். II ஆம் திருமுறைக்கு உரை எழுதினார். |