7 1. தொண்டை மண்டலமா? தொண்ட மண்டலமா? தொண்டை மண்டலம் என்று இருக்க வேண்டுவதை, தொண்ட மண்டலம் எனத் தம் மாணாக்கர் ஒருவர் பொருட்டுச் சாதிக்கப் புகுந்து, புது விதிகள் கற்பி்த்து அறிவில்லாதாரை வஞ்சித்தாரே! அவைகள் பழவிதிகள் என்பார் ஆயின், இன்ன நூலில் - இன்ன அதிகாரத்தில் - இன்ன இயலில் - இத்தனையாம் சூத்திரம் எனக் காட்டல் வேண்டுமே! ‘தொண்டை மண்டலமே சரி’ என்பது-அகத்திய முனிவர் வரத்தால் தோன்றி, வட நூற் கடலும் தென் தமிழ்க் கடலும் முழுது ஒருங்கு உணர்ந்து, சிவாநுபூதிப் பெருஞ்செல்வம் உற்று, விளங்கிய திராவிட பாஷ்ய முநிவராகிய திருக்கைலாச பரம்பரைத் திருவாவடுதுறைச் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த, எந் நாட்டு... நன் நாட்டைப் புலவர் எலாம் தொண்டை நாடு உன உரைப்பர்... -காஞ்சிப்புராணம்; திருநாட்டுச் சிறப்பு. என்னும் செய்யுளால் துணிக. 2. ஒழிவிலொடுக்க உரைப் பதிப்பும் பிழைகளும் (1) பிரளயாகலர் ஆவார், இருமலமும் உடையவராகிய உருத்திரர்கள் என்பதும்; சகலர் ஆவார், மும்மலமும் உடையவராகிய பிரம விட்டுணு முதல் கிருமி ஈறாக உள்ள உயிர்கள் என்பதும் சாதாரணமாகிய தத்துவக் கட்டளைகள் வாசித்தவர்க்கும் தெரியுமே! அஃது அறியாது, “பிரளயாகலர் மும்மலங்கள் ஒரு மலம் நீத்தோர்; அவர் பிரமன் முதலானோர்” என்று, ஒழிவிலொடுக்க உரைப் புத்தக முதலிலே பதிப்பித்த இராமலிங்க பிள்ளையா ஓதாது உணர்ந்தவர்? (2) ஸ்ரீ, ஸ்திரி-என்னும் சொற்களுக்கும்; கண்ட (Kanta) கண்ட (Ganta) என்னும் சொற்களுக்கும் வேற்றுமை அறியாது, ‘ஸ்ரீகண்ட பரமசிவன்’ என்பதற்கு, ‘பெண்ணைப் பாகத்து உடைய பரமசிவன்’ எனப் பொருள் கூறி, தமது அறியாமையை உலகு அறியப் புலப்படுத்திய இராமலிங்க பிள்ளையா ஓதாது உணர்ந்தவர்? |