| "இலட்சக்கணக்கானவர்களுக்கு ஆங்கிலப் படிப்பளிப்பது அவர்களை அடிமைப்படுத்துவதாகும். படிப்புக்கு மெக்காலே போட்ட அஸ்திவாரம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது. அவ்வித நோக்கம் அவருக்கு இருந்ததென்று நான் கூறவில்லை. ஆனால் பலன் அதுவே ஆயிற்று. சுய ஆட்சியைப்பற்றி ஒரு அன்னிய மொழியில் பேசவேண்டியிருப்பது வருந்தத் தக்க விஷயமல்லவா? "ஆங்கிலக் கல்வி பெற்றதால் நாட்டை நாம் அடிமைப்படுத்தி விட்டோம் என்பது கவனிக்கத்தக்கதாகும். நயவஞ்சகம், கொடுமை முதலியன அதிகரித்துவிட்டன. ஆங்கிலம் அறிந்த இந்தியர் மக்களை ஏமாற்றி மிரட்டுவதற்குத் தயங்குவதேயில்லை. இப்பொழுது நம் மக்களுக்கு ஏதாவது செய்து கொண்டிருக்கிறோமென்றால் அவர்களுக்குரிய கடனில் ஒரு சிறு பாகத்தை மாத்திரம் செலுத்தி வருகிறோம்."1 காந்தியடிகள், மாநிலந்தோறும் உள்ள அரசுகளும் உயர்நீதி மன்றங்களும் பல்கலைக்கழகங்களும் அந்தந்த மாநில மொழியிலேயே நடத்தப் பெறவேண்டுமென்று வற்புறுத்தியது போல, மத்திய அரசும் மற்றும் அகில இந்திய நடவடிக்கைகளும் இந்துஸ்தானியிலே நடைபெற வேண்டுமென்று வற்புறுத்தினார். ஆனால்,மொழி, கலாச்சாரத் துறைகளிலே தமிழகம் பெற்றுள்ள தனித்தன்மையை அடிகளார் மறந்துவிடவில்லை. அதனையும் நினைவில் கொண்டு, "வடநாட்டினரும், மேற்குப் பிரதேசத்தவர் பலரும் தமிழ் கற்க வேண்டும்."2 என்பதற்காக, 1909ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார் அடிகள். சுருங்கச் சொன்னால், சுதந்திர இந்தியாவிலே, வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ளவும் அறிவுக் கலைகள் பயிலவும் ஆங்கிலம் துணை மொழியாவதன்றி, வேறு எந்த வகையிலும் இந்திய மொழிகளின் முன்னேற்றத்தைத் தடுத்து அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் மொழியாக இருத்தல் கூடாதென்று தெள்ளத் தெளியக் கூறினார். 1. காந்தி நூல்கள் தொகுப்பு - 1, பக்கம் 72-73 2. காந்தி நூல்கள் தொகுப்பு - 1, பக்கம் 75 |