பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 15

     இனி,   கட்டபொம்மன்    புகழ்பாடும்   கவிதை    இலக்கியங்களில்
ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்ப்போம்.

கலியுகப் பெருங்காப்பியம்

      பாஞ்சாலக்குறிச்சிப் போர்பற்றி  விரிவாகக்  கூறுகின்ற   நமச்சிவாயப்
புலவர் இயற்றிய கலியுகப் பெருங் காப்பியம். இந்தக்  காப்பியம்   நாலாயிரம்
செய்யுட்களைக்  கொண்டதாகும்; புராண  ரீதியில் ஆற்றுப் படலம்,  நாட்டுப்
படலம், நகரப்படலம் ஆகியவற்றைக் கொண்டுள்ள.  "இந்தக்  காப்பியத்திலே
உண்மைக்கு மாறான செய்திகள் பலவும் சேர்க்கப்பட்டுள்ளன" என்று   குறை
பட்டுக் கொள்கிறார், 'வீர பாண்டியம்' பாடிய மதுரை ஜெகவீர பாண்டியனார்.

     "நமச்சிவாயப் புலவர்  என்பவர் பாஞ்சாலக்குறிச்சி  அரசின்  பெருமை
குறித்து 'கலியுக பெருங்காப்பியம்' என ஒன்று பாடியுள்ளார். அதில்  சரிதைத்
தொடர்ச்சி   யாதுமில்லை ....   பிழைகள்    பல   மலிந்து   இழிநிலையில்
இயந்திருத்தலால் வெளியிடவில்லை"1.

     ஜே.எப்.கீர்னஸ்2  என்னும்  ஆங்கிலேயரும்  கலியுகப்  பெருங்காவியம்
பற்றிக் குறைகூறி  எழுதியுள்ளார். கட்டபொம்மன் புகழ் பாடுவதே அவருக்குப்
பிடிக்கவில்லை. இவர்கள் கருத்து எதுவாயினும் சரி; நாலாயிரம் செய்யுட்களைக் கொண்ட இப்பெருங்காப்பி யம் கட்டபொம்மனைப் பற்றிய கவிதை இலக்கியங்
களிலேயே தலை சிறந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், இதுவரை அச்சிடப்
பெறவில்லை.  இதன்   ஆசிரியர்  பஞ்சாட்சரக்  கவி  என்றும்   அழைக்கப்
பெறுகின்றார்.  இவர்,  கட்டபொம்முவின்  காலத்திலேயே  வாழ்ந்தவர் என்று
தெரிகிறது.

     கலியுகப்  பெருங்காப்பியம்,  வீரபாண்டியக் கட்டபொம்மனின் பெருமை
மிக்க  வரலாற்றைக்  கந்தபெருமானுக்கு  நாரத  முனிவர்  கூறும்  முறையில்
இயற்றப்  பெற்றுள்ளது . எளிய  நடையில் சாமான்யரும்  புரிந்து  கொள்ளக்
கூடிய  முறையில்  எழுதப்பட்டுள்ளது . இந்தக் காப்பியத்தில், கட்டபொம்மன்
ஆட்சி புரிந்த பாஞ்சைப் பதியை வருணிக்கும் பாடல்வருமாறு:

சென்னலுங் கத்தி கட்டிச்சேவித்து நின்று தங்கள்
நன்னய மரபுக் கேற்ற நல்லுப சாரஞ் செய்து
மன்னவர் மன்னீரயென்றும் கனமகன் துரைநீ யென்றும்
சொன்னவார்த் தையுமேன் மேலும் துலங்கிய பாஞ்சை நாடு


1. வீரபாண்டியம், பக் 10 அடிக்குறிப்பு
2. J.F.KEARNS
A