பக்கம் எண் :

256விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

மொழியின்    தனித்தன்மையைக்    காப்பதிலேயும்     தமிழ்   நடையை வளப்படுத்துவதிலேயும்    தேசியவாதிகள்   அதிக   ஆர்வம்   காட்டினர்.

     "இங்கிலாந்தில்   வர்த்தமானப்   பத்திரிகைகள்   ப்ரான்ஸ்  தேசத்து
மந்திரிகளுடைய   உபந்யாசங்களையும்,   பெரிய   சாஸ்திரிமார்,   பெரிய
கைத்தொழில்  நிபுணர்,  த்ரவ்ய சாஸ்திர  நிபுணர், ஜனத்திருத்தத் தலைவர்
முதலியவர்களின்  உபந்யாசங்களையும் பல ப்ரெஞ்சு ராஜாங்க சம்பந்தமான
விவகாரங்களையும்,  ப்ரெஞ்சு  பத்திரிகைகளிலிருந்து   மொழி  பெயர்த்துப்
போடுகின்றன.   ஆனால்,  அந்த   மொழிபெயர்ப்புகளில்  ஸ்வபாஷையின்
வழக்கங்களையும்  பிரயோகங்களையும்   கை விட்டு அன்னிய பாஷையின்
வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது.

      "ஆனால்,   தமிழ்நாட்டிலோ  முழுதும்   தமிழ்   நடையை  விட்டு
இங்கிலீஷ்   நடையில்   தமிழை  எழுதும்  விநோதமான  பழக்கம்  நமது
பத்திராதிபர்களிடம்   காணப்படுகிறது.   முதலாவது,   நீ   எழுதப் போகிற
விஷயத்தை   இங்கிலீஷ்  தெரியாத  ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்
காட்டு.   அவனுக்கு   நன்றாக   அர்த்தம்  விளங்குகிறதா என்று பார்த்துக்
கொண்டு   பிறகு   எழுது.   அப்போது  தான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்
நாட்டிற்குப்   பயன்படும்...    இல்லாதுபோனால்,    நீயும்    சிரமப்பட்டு
மற்றவர்களுக்கும் பயனில்லாமற் போகிறது."1

     விடுதலைப்    போராட்ட  காலத்தில் ஆங்கிலம் படித்த கனவான்கள்
- இவர்களிலே தேசியவாதிகளும் உண்டு - தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கிப்
படிக்கவோ,   அவற்றிற்கு   ஆதரவு தரவோ விருப்பமில்லாதவர்களாகவோ
இருந்தனர்.   தமிழ்   நாட்டிலுள்ள பிரதான  நகரங்களில்   கூட,  தமிழ்ப்
பத்திரிகைகளுக்குச் செய்திகள் அனுப்பும் நிருபர்கள் இருக்கவில்லை. பொது
நிகழ்ச்சிகள்  நடத்தும் ஆங்கிலம் படித்தவர்கள் தமிழ்ப் பத்திரிகைகளுக்குச்
செய்திகள்   அனுப்புவதிலே   அதிக  ஆர்வம் காட்டவில்லை. அவர்களது
போக்கைக் கண்டித்து மகாகவி பாரதியார் எழுதியது வருமாறு:

     "இங்கிலீஷ்   படித்த    வக்கீல்களும்,   இங்கிலீஷ் பள்ளிக் கூடத்து
வாத்தியார்களும்,... தமிழ் பத்திரிகை வாங்கிப் படிக்க வேண்டும்."


1.பாரதி-கட்டுரை பக்.416.