இந்திய தேசிய ஒருமைப்பாடும் இந்தியாவின் அரசியல் விடுதலையும்
வள்ளற்பெருமானின் உள்ளத்திற்குப் புறம்பானவையென்று கொள்வதற்கில்லை.
சித்திவளாகத்தில் தம் சீடர்களுக்குச் செய்த உபதேசத்தில்,
"சாதி, வமிச முதலியவைகளால் ஏற்படும் வேற்றுமையான அடைவினில்
நீங்கிப்போய், அகிலமாம் சகோதரத்துவத்தின் மூலக்கருத்தின் சாரத்தை
ஒத்துக்கொண்டு, இந்தியாவில் 'சகோதர அறம்' நிலைநாட்டப்பெறும்."1
என்று அடிகளார் அடிக்கடி குறிப்பிட்டு வந்ததாக, தொழுவூர் வேலாயுத
முதலியார் கூறியுள்ளார். வள்ளலார் "கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக" எனத்
துவங்கும் தமது பாடலில், அல்வழிப்பட்ட துன்மார்க்கராட்சி தொலைந்து,
நல்வழிப்பட்ட நன்மார்க்கராட்சி தோன்ற வேண்டுமென்று கூறியுள்ளார்.
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுள ராகிஉல கியல்நடத்த வேண்டும்
என்றும் பாடியுள்ளார். அடிகளார் வெளியிட்டுள்ள இக்கருத்துக்கள்
அவர் காண விரும்பிய ஆன்மநேய ஒருமைப்பாடு, தேசிய ஒருமைப்
பாட்டையும் தேச விடுதலையையும் உட்கொண்டது தான் என்பதனை
விளக்குகின்றன.
இந்த உண்மையை வள்ளலாருக்கு அடுத்த தலைமுறையினரான
பாரதியார் நன்கு உணர்ந்திருந்தாராதலால், ஆன்ம விடுதைலையை வெளிப்
படையாக வலியுறுத்தி வள்ளலார் பாடியுள்ள "களக்கமறப் பொதுநடம்நான்
கண்டுகொண்ட தருணம்" என்ற பாடலை, அரசியல் விடுதலைக்கும் பயன்படத்
தக்கதாக மாற்றியமைத்து, "களக்கமற மார்லிநடம் கண்டு கொண்ட தருணம்"
என்ற முதலடி கொண்ட பாடலைப் பாடியுள்ளார்.
வள்ளலாரின் "ஆன்மநேய ஒருமைப்பாடு" என்னும் குறிக்கோள் வெற்றி
பெறுமானால், மனித சமுதாயத்தில் நிலவிவரும் எல்லாவிதமான அடிமைத்
தனங்களும் கொடுமைத் தனங்களும் தொலைந்து புரட்சிகரமானதொரு புது
உலகம் பூக்குமென்று பாரதியார் நம்பினார். தமது "கட்டுரைகள்" என்ற நூலில்
வள்ளலார் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:
1.தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதிய உண்மைகள்.