பக்கம் எண் :

66விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

கொண்டு பிளப்பதன் மூலம்  வங்காளியரின் இனஉணர்ச்சியை மட்டுமன்றி,
தேசிய   ஒருமைப்பாட்டுணர்ச்சியையும்   அழித்தொழிக்க   முடியுமென்று
கனவு கண்டார் லார்டு கர்சான்.

     கர்சானின்   சதித்  திட்டத்திற்கு   எதிராக  வங்காளியர்  பொங்கி
எழுந்தனர்; புரட்சித் தீயை மூட்டினர். “வங்கம் வங்காளியருக்கே” என்று
கோஷித்தனர். “வங்கம் வங்காளியரின் தாய் வீடு; அதனை மதக் கோடரி
கொண்டு பிளக்காதே “ என்று வானதிரக் குரல் கொடுத்தனர்.

     அதே   நேரத்தில்,  மகாராஷ்டிர  மாநிலத்திலே,  மராத்தி   மொழி
பேசுவோரின்  பெருந்தலைவராக  விளங்கிய  லோகமான்ய  பாலகங்காதர
திலகரை, தம் தாய்மொழியிடத்தும் தாய்நாட்டிடத்தும் பற்றுடைய தீவிரவாதி
என்ற காரணத்துக்காகத் துன்புறுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி. அவர் நடத்திய
பத்திரிக்கைக்கு ஜாமீன் கேட்டது. இராசத் துவேஷமாக எழுதினார்,அரசியல்
நோக்குடன்  கொலைச்  செயல்களுக்கு   மக்களைத்  தூண்டினார்  என்ற
குற்றங்கள்  சாட்டி,  திலகரைச்  சிறைக்குள்  தள்ளியது  ஆட்சி. இதனால்,
மராத்திமொழி  பேசும்  மக்கள்  கொதிப்புற்று, ஆட்சிமீது  கோபாவேசம்
கொண்டனர்.

டாக்டர் பட்டாபி தரும் தகவல்

     இன்னும் பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் 1857ல் நடந்த புரட்சியைப்
போன்று திரும்பவும் ஒருபுரட்சி தோன்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்க
இரகசியக்  குழுக்கள்  வேலை  செய்துவந்தன. ஆட்சிக்கு  எதிரான  சதிச்
செயல்கள் ஆங்காங்கு தலைகாட்டின.

      “தங்கள்  குறைகளுக்கு  அரசு  சிறிதும் செவிசாய்க்கவில்லை என்று
மக்கள் கோபம் கொண்டனர். மறுபடியும் ஜனநாயக விரோதமான பிரிட்டிஷ்
அரசைச்   சாய்த்துவிட   நாட்டின்  பல  பகுதிகளில்  சதிகள்  தோன்றின.
மக்களின்   கேவல  நிலையும்  அதன்  விளைவாக  அவர்கள்  அடைந்த
கொதிப்பும்   தட்சிண   விவசாயிகள்   நடத்திய   கலகத்தின்  வாயிலாக
வெளிப்பட்டது.

     “இந்த  நிலையில்தான் ஹ்யூம் என்பார் இந்நாட்டினரின் துயரங்களை
அவ்வப்போது    அரசினருக்கு    எடுத்துரைக்க   ஒரு   தேசியஅமைப்பு
வேண்டுமென்று  நினைத்தார். இந்த  நினைப்பின்  விளைவாகவே  இந்திய
தேசிய காங்கிரஸ் மகாசபை நிறுவப்பெற்றது.”1


1. காங்கிரஸ் வரலாறு பக். 5