பக்கம் எண் :

156என் சரித்திரம்

எனக்கு நிமிஷத்திற்கு நிமிஷம் சந்தோஷத்தினால் உண்டாகும்
படபடப்பு அதிகமாயிற்று. என் தந்தையாருக்கோ வரவரக் கவலையின் அறிகுறி
முகத்தில் தோற்றத் தொடங்கியது. பல நாட்களாக நினைந்து நினைந்து
எதிர்பார்த்து ஏங்கியிருந்த நான் ஒரு பெரிய பாக்கியம் கிடைக்கப்
போகிறதென்ற எண்ணத்தால் எல்லாவற்றையும் மறந்தேன். அக்காலத்தில்
கோபால கிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் இருந்தார். அச்செய்தியை நான்
அறிவேன். வேறு சந்தர்ப்பமாக இருந்தால் நான் மாயூரத்தில் அடி
வைத்தேனோ இல்லையோ உடனே அவரைப் போய்ப் பார்த்திருப்பேன்;
மாயூரத்திலுள்ள அழகிய சிவாலயத்திற்குச் சென்று சுவாமி தரிசனம்
செய்திருப்பேன்; அந்நகரிலும் அதற்கருகிலும் உள்ள காட்சிகளைக் கண்டு
மகிழ்ந்திருப்பேன். அப்போதோ என் கண்ணும் கருத்தும் வேறு ஒரு
பொருளிலும் செல்லவில்லை.

ஒரு நல்ல காரியத்திற்கு எத்தனை தடைகள் உண்டாகின்றன! நான்
தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு
காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனாலும்
அப்படியே நின்றுவிடவில்லை. பந்துக்களில் பலர் நான் ஸம்ஸ்கிருதம் படிக்க
வேண்டுமென்று விரும்பினார்கள். இராமாயண பாரத பாகவத காலக்ஷேபம்
செய்து ஸம்ஸ்கிருத வித்துவானாக விளங்க வேண்டுமென்பது அவர்கள் கருத்து.
வேறு சில கனவான்களோ நான் இங்கிலீஷ் படித்து விருத்திக்கு வர
வேண்டுமென்று எண்ணினார்கள். உதவி செய்வதாகவும் முன் வந்தனர். நான்
உத்தியோகம் பார்த்துப் பொருளீட்ட வேண்டுமென்பது அவர்கள் நினைவு.
என் தந்தையாரோ சங்கீதத்தில் நான் வல்லவனாக வேண்டுமென்று
விரும்பினார். அவர் விருப்பம் முற்றும் நிறைவேறவில்லை; எல்லாருடைய
விருப்பத்திற்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின்
அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற
வேண்டுமென்று அவாவி நின்றது. ஸம்ஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ்
இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவரவில்லை. சில சமயங்களில்
அவற்றில் வெறுப்பைக்கூட அடைந்தேன். சங்கீதம் பரம்பரையோடு
சம்பந்தமுடையதாகவும் என் தந்தையாரது புகழுக்கும் ஜீவனத்துக்கும்
காரணமாகவும் இருந்தமையால் அதன் பால் எனக்கு அன்பு இருந்தது. ஆனால்
அந்த அன்பு நிலையாக இல்லை. என் உள்ளத்தின் சிகரத்தைத் தமிழே
பற்றிக்கொண்டது; அதன் ஒரு மூலையில் சங்கீதம் இருந்தது. எந்தச்
சமயத்திலும் அந்தச் சிறிய இடத்தையும் அதனிடமிருந்து கவர்ந்துகொள்ளத்
தமிழ் காத்திருந்தது.