பக்கம் எண் :

நான் கொடுத்த வரம் 233

“தங்களை ஒரு வரம் கேட்கிறேன். அதைத் தாங்கள் கொடுத்தாக
வேண்டும்; இல்லாவிட்டால் என் தலை போய்விடும்! நான் காலை
விடமாட்டேன். கேட்ட வரத்தைக் கொடுப்பதாக வாக்குத் தத்தம் செய்தால்
எழுந்திருப்பேன்.

எனக்கு விஷயம் புரியவேயில்லை; ஒரே மயக்கமாக இருந்தது; “இவர்
இன்றைக்கு நம்மைத் தெய்வமாகவே எண்ணி விட்டாரா என்ன? இவர்
கொடுத்த பிரசாதம் தெய்வர்களுக்கே ஏற்றவை. இப்போது நம்மை இவர்
நமஸ்கரிக்கிறார்; வரம் கேட்கிறார். இவையெல்லாம் நாடகம் மாதிரி
இருக்கின்றனவே!” என்று எண்ணி, “எழுந்திரும் ஐயா, எழுந்திரும்! வரமாவது
கொடுக்கவாவது!” என்று கூறினேன். அவர் விட்டபாடில்லை.

“நீங்கள் வாக்களித்தாலொழிய விடமாட்டேன்.”

“சரி, நீர் சொல்லுகிறபடியே செய்கிறேன்” என்று நான் சொன்னவுடன்
அவர் மெல்ல எழுந்திருந்தார்; கை கட்டி வாய் புதைத்து அழாக் குறையாகச்
சொல்லத் தொடங்கினார்.

“இன்று பிரசாதமொன்றும் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்று
தெரிகிறது. கிரமமாக வரவேண்டிய சமையற்காரன் இன்று வரவில்லை. அதனால்
ஒன்றும் நேராகச் செய்ய முடியவில்லை. இந்த விஷயம் சாமிக்கு (கட்டளைத்
தம்பிரானுக்கு)த் தெரிந்தால் என் தலை போய்விடும். சாமிக்கு இவ்விஷயத்தைத்
தாங்கள் தெரிவிக்கக் கூடாது. தெரிவித்தால் என் குடும்பமே
கெட்டுப்போய்விடும். நான் பிள்ளைகுட்டிக்காரன் மகாலிங்கத்தின் பேரைச்
சொல்லிப் பிழைத்து வருகிறேன். என் வாயில் மண்ணைப் போட்டு விடாதீர்
கள்” என்று என் வாயில் உமியையும் கல்லையும் பிரசாதமாகப் போட்ட அந்த
மனுஷ்யர் வேண்டிக் கொண்டார்.

“சரி, அப்படியே செய்கிறேன்; நீர் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்”
என்று நான் அவர் கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.

‘இந்த மாதிரி எங்கும் இல்லை’

ஜாக்கிரதையாக அம்மடைப்பள்ளியிலிருந்து விடுபட்டுக்
கொட்டாரத்துக்கு வந்து தம்பிரானைப் பார்த்தேன்.

“என்ன? வெகு நேரமாகி விட்டதே; காரியஸ்தர் அதிக நாழிகை காக்க
வைத்து விட்டாரோ?” என்று அவர் கேட்டார்.

“இல்லை; பிரசாதங்கள் பல வகையான இருந்தன; ஒவ்வொன்றையும்
ருசி பார்ப்பதற்கே நேரமாகி விட்டது.”