பக்கம் எண் :

பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் 243

பிள்ளையவர்கள் எந்த இடத்திற்குப் போனாலும் அந்த
இடத்தைப்பற்றிய சரித்திரச் செய்திகளையும் ஸ்தலமானால் அதன் சம்பந்தமான
புராண வரலாறுகளையும் உடனிருப்பவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். ஸ்தல
வரலாறுகளைத் தெரிந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது தாம் இயற்றும்
நூல்களில் அமைத்துக் கொள்ளும் இயல்புடைய அவர் தமிழ் நாட்டு
ஸ்தலங்களைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்திருந்தார்.

அரண்மனைச் சுவர்

பட்டீச்சுரத்தில் நாங்கள் புகுவதற்கு முன் ஓரிடத்தில் மிகவும் உயரமாக
இடிந்த கட்டிடம் ஒன்றைக் கண்டோம்; இரண்டு சுவர்கள் கூடிய மூலையாக
அது தோற்றியது; அதன் உயரம் ஒரு பனைமரத்தின் அளவுக்குமேல் இருந்தது.
பின்பு கவனித்ததில் பல படைகளையுடைய மதிலின் சிதைந்த பகுதியாக
இருக்கலாமென்று எண்ணினோம்.

“இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கட்டிடம் இருத்தற்குக் காரணம்
என்ன?” என்று அதைப்பற்றி என் ஆசிரியரைக் கேட்டேன்.

“பட்டீச்சுரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஒன்றாகிய சோழன் மாளிகை
என்பது இது. இந்த இடத்திலே சோழ அரசர்களுக்குரிய அரண்மனை முன்பு
இருந்தது என்றும், இந்த இடிந்த கட்டிடம் அரண்மனைச் சுவர் என்றும்
இங்குள்ளவர்கள் சொல்வதுண்டு.”

பழையாறை

பட்டீச்சுரத்தைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் பழைய சரித்திரத்தை
விளக்கும் சின்னங்கள் நிரம்பியிருக்கின்றன. நான் பட்டீச்சுரத்தில் தங்கியிருந்த
காலங்களில் தெரிந்து கொண்ட செய்திகளையன்றி அப்பால்
இலக்கியங்களாலும், கேள்வியாலும் சிலாசாஸனங்களாலும் தெரிந்துகொண்ட
விஷயங்கள் பல. சோழ அரசர்கள் தமக்குரிய இராசதானியாகக் கொண்டிருந்த
பழையாறை என்னும் நகரத்தின் பல பகுதிகளே இப்போது தனித்தனி
ஊர்களாக உள்ளன. அந்தப் பழைய நகரத்தைச் சேக்கிழார் தம் பெரிய
புராணத்தில்,

“பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை”

என்று பாராட்டுகிறார். இப்போது பட்டீச்சுரத்திற்கு அருகிலே கீழைப்
பழையாறை என்னும் ஓர் ஊர்தான் அப்பழம் பெயரைக் காப்பாற்றி வருகிறது.
சரித்திர விசேஷங்களால் பெருமை பெற்ற