பக்கம் எண் :

ஆறுமுக பூபாலர் 249

இரவு ஒன்பது மணிக்கு மேல் எல்லோரும் படுத்துக்கொள்வார்கள்;
சாப்பிடாமலே படுத்து உறங்குவார்கள். பன்னிரண்டு மணி அல்லது ஒரு
மணிக்கு ஆறுமுகத்தா பிள்ளை எழுந்து இலை போடச் சொல்லுவார்.
தூங்கினவர்களை எழுப்பி உண்ணச் செய்வார். அயலூர்களிலிருந்து யாரேனும்
வந்து திண்ணையில் தங்கி இருப்பார்கள். அவர்களையும் அழைத்து உணவு
கொள்ளச் சொல்லுவார்.

இந்த அர்த்தராத்திரி விருந்து நடைபெறும் பொழுது நான்
பிள்ளையவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பாடம் கேட்க வேண்டும்.
ஆறுமுகத்தா பிள்ளை இட்ட கட்டளை இது.

ஒன்பது மணிக்கு மேல் எல்லோரும் படுத்துக் கொண்ட பிறகு நான்
சிறிது நேரம் படித்துவிட்டுத் தூங்கிவிடுவேன். அஸ்தமித்தவுடன்
பிள்ளையவர்கள் அனுஷ்டானம் செய்து மீளும்பொழுதே அக்கிரகாரத்தில் என்
ஆகாரத்தை முடித்துக் கொள்பவன் நான். பாதிராத்திரியில் விழித்துக் கொண்டு
பிள்ளையவர்கள் சாப்பிடும் போது பாடம் கேட்பதால் என்ன பயன்
விளையப்போகிறது? எனக்குத் தூக்கக் கலக்கமாக இருக்கும். என் ஆசிரியர்
உண்ணும் போதே எப்படித் தடை இல்லாமல் பாடம் சொல்ல முடியும்?
ஆதலின் அப்போது நான் கேட்கும் பாடம் என் நன்மையை உத்தேசித்ததாக
இராது. ஆறுமுகத்தா பிள்ளையின் திருப்தியை எண்ணியே நான்
அர்த்தராத்திரியில் பாடம் கேட்டு வந்தேன்.

ஆறுமுகத்தா பிள்ளையின் கோபம்

ஆனாலும் சில தினங்களில் நான் விழித்துக் கொள்ளாமல் தூங்கிப்
போய்விடுவேன். அதனால் பாடம் கேளாமற் போக நேரும். அத்தகைய
சமயங்களில் ஆறுமுகத்தா பிள்ளை சாப்பிட்டவுடன் வந்து என்னை எழுப்பிக்
கண்டிப்பார்; உடனே எழுப்பாவிடினும் மறு நாளாவது கண்டிக்கத்
தவறமாட்டார். “உமக்கு எங்கே படிப்பு வரப் போகிறது? சாப்பிடுவதும்
தூங்குவதுமே உமக்குப் பிரியமான தொழில்கள்; நீர் பெரிய சோம்பேறி.
இராத்திரி எழுந்து பாடம் கேட்பதை விட உமக்கு வேறு வேலை என்ன?”
என்று கோபித்துக் கொள்வார். பிறருடைய கஷ்ட சுகங்களை அறிந்துகொள்ள
முயலாத மனிதர்களிடம் பழகுவதைவிட அவர்களுடைய சம்பந்தமே இராமல்
வாழ்வது நலம். நான் ஆறுமுகத்தா பிள்ளையின் கோபத்தை ஆற்றுவதற்கு
உரிய சக்தியில்லாதவன்; “தெய்வமே!” என்று அவருடைய கோபச் சொற்களைக்
கேட்டு வாய் பேசாமல் நிற்பேன்.