சுருக்கமாகச் சொல்லுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொண்டார் அக்கவிஞர். சிவ ஸ்தல விஷயமாகப் பல செய்திகளை அவர் அறிந்திருந்தார். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவற்றை வற்புறுத்த வேண்டுமென்பது அவரது அவா. ஆகையால் நந்தன் பல சிவ ஸ்தலங்களைத் தரிசித்து இன்புற்றானென்ற வரலாற்றை விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார். அப்பகுதிக்கு “நந்தன் வழிபடு படலம்” என்று பெயர். முன்பு 53 பாடல்கள் பாடப் பெற்றிருந்தன. அதற்கு மேல் நந்தன் பிரயாணத்தைப் பற்றிய செய்திகளை உரைக்கும் செய்யுட்கள் எங்கள் பிரயாணத்தில் இயற்றப்பட்டன. அவ்வப்போது ஒவ்வொரு செய்யுளை ஆசிரியர் புதியதாகச் சொல்ல நான் எழுதியிருக்கிறேன். அக்காலங்களிலேயும் அவரது கவித்துவத்தைக் குறித்து நான் வியந்ததுண்டு. ஆனால் இப்பிரயாணத்தில் எனக்கு உண்டான ஆச்சரியமோ எல்லாவற்றையும் மீறி நின்றது. ஒரு வரலாற்றை அமைத்துத் தொடர்ச்சியாகப் பேசுவது போலவே செய்யுட்கள் செய்வதென்பதைக் கதையில்தான் கேட்டிருந்தேன். கம்பர் ஒரு நாளில் எழுநூறு செய்யுட்கள் பாடினாரென்று சொல்லுவார்கள். “அவ்வளவு விரைவில் செய்யுள் இயற்ற முடியுமா? அது கட்டுக் கதையாக இருக்க வேண்டும். அல்லது கம்பர் தெய்விக சக்தியுடையவராக இருக்கவேண்டும்” என்று நான் நினைத்திருந்தேன். அன்றைத் தினம் ஆசிரியர் செய்யுட்களை இயற்றிய வேகத்தையும் அதற்குப் பின் பல சமயங்களில் அவருடைய கவிதை வெள்ளம் பெருக்கெடுத்து வருவதையும் நேரே அறிந்த எனக்கு அப்பழைய வரலாறு உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கை உண்டாயிற்று. வண்டியிலே போவதை நாங்கள் மறந்தோம். தம் கற்பனா உலகத்தில் அவர் சஞ்சாரம் செய்தார். அங்கிருந்து ஒவ்வொரு செய்யுளாக உதிர்த்தார். அவற்றை நான் எழுதினேன். எனக்கு அவருடைய உருவமும் அவர் கூறிய செய்யுட்களுமே தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை. ஒரு பாட்டை அவர் சொல்லி நிறுத்தியவுடன் சில சில சமயங்களில் அந்த அற்புத நிகழ்ச்சிக்குப் புறம்பாக நின்று நான் சில நேரம் பிரமிப்பை அடைவேன். ஆனால் அடுத்த கணமே மற்றொரு செய்யுள் அவர் வாயிலிருந்து புறப்பட்டு விடும். மீண்டும் நான் அந்த நிகழ்ச்சியிலே கலந்து ஒன்றி விடுவேன். திருவாவடுதுறையை அடைந்தது “திருவாவடுதுறை வந்துவிட்டோம்” என்று வண்டிக்காரன் சொன்னபோதுதான் நாங்கள் நந்தனையும் அவன் போன வழியை |