பக்கம் எண் :

சிதம்பரம் பிள்ளையின் கலியாணம் 311

தூணில் சாய்ந்தபடியே இருந்தார். ‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்?’
என்று எண்ணினார். “ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதாகத் தோற்றுகிறது.
நாம் இப்போது கலைக்க வேண்டாம்” என்ற கருத்தோடு தம்பிரான் மீட்டும்
படுத்தனர். அப்பால் சிறிது நேரங்கழித்து விழித்துப் பார்த்தபோதும்
அம்மாணாக்கர் முன்பு இருந்த படியே இருந்தார். அன்று இரவு இப்படி நான்கு
முறை விழித்துப் பார்த்தபோதும் அவர் அந்நிலையில் இருந்ததைக் கவனித்த
தம்பிரான், “இவர் ஏதோ மன வருத்தத்தால் இம்மாதிரி இருக்கிறார் போலும்!
அவ்வருத்தத்துக்குக் காரணம் இன்னதென்று தெரிந்து நீக்க வேண்டும்” என்று
முடிவு செய்தனர்.

தம்பிரான் தினந்தோறும் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து காவிரிக்கு
ஸ்நானம் செய்யப் போவார். அப்படி அன்று காலையில் எழுந்தபோதும்
சாமிநாதபிள்ளை தூணிற் சாய்ந்தபடியே இருந்ததைப் பார்த்து, “ராத்திரி
முழுவதும் குத்த வச்சுக் கொண்டிருந்தீரே! காரணம் என்ன? என்ன துக்கம்
வந்துவிட்டது?” என்று கேட்டார்.

அவர் ஏதோ கனவிலிருந்து திடீரென்று தெளிந்தவரைப்போல எழுந்து,
“அவளைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றார்.

அம்மாணாக்கர் கலியாணம் ஆனவர். தம் மனைவியைப் பிரிந்து
வந்தவர் அந்த விஷயம் தம்பிரானுக்குத் தெரியுமாதலின் சாமிநாதபிள்ளையின்
வருத்தத்திற்குரிய காரணத்தையும் தெரிந்து கொண்டார்.

நான் எழுந்தவுடன் தம்பிரான் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே,
“சேய்ஞலூர் இந்திரன் இங்கே இருக்கிறானே, தெரியுமா?” என்று கேட்டார்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“கந்த புராணத்தில் குமாரபுரிப்படலத்தில் இந்திரன் இரவெல்லாம்
தூங்காமல் வருந்தியதாகச் சொல்லப்பட்டுள்ள விஷயம் ஞாபகம்
இருக்கிறதோ?”

“ஞாபகம் இல்லாமல் என்ன? ஐயா அவர்கள், காவியங்களில்
அத்தகைய செய்திகள் வருமென்று சொன்னார்களே” என்றேன்.

“அதைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. சேய்ஞலூரில் தூங்காமல்
இந்திராணியை நினைத்துக் கொண்டிருந்த இந்திரன் இப்போது சாமிநாத
பிள்ளையாக அவதரித்து வந்திருக்கிறான்”