பக்கம் எண் :

நான் இயற்றிய பாடல்கள் 341

பள்ளி செல்லும் ரெயில் பாதை ஒன்றுதான் இருந்தது. அதனால்
நாகபட்டினத்திற்கும் தஞ்சைக்குமிடையேயுள்ள நீடாமங்கலம் சென்று அங்கே
ரெயிலேற வேண்டியிருந்தது. பட்டிடீச்சுரத்திலிருந்து நீடாமங்கலம் வரையில்
வண்டியிலே சென்றோம் அப்படிப் போகும்போதே திருப்பெருந்துறைப்
புராணத்திலே பெருந்துறைப் படலத்தில் முப்பது செய்யுட்களை ஆசிரியர்
சொல்ல நான் எழுதினேன்.

நீடாமங்கலத்தில் ரெயிலேறித் திருச்சிராப்பள்ளி போய்ச் சேர்ந்தோம்.
அங்கே சில காலம் தங்கியிருந்தோம். பிள்ளையவர்கள் பிறந்த ஊராதலின்
இளமையிலே அவர்களோடு பழகியவர்களும் பாடம் கேட்டவர்களுமாகிய பலர்
வந்து வந்து பார்த்துப் பாராட்டிச் சென்றார்கள். அப்பொழுதப்பொழுது என்
ஆசிரியர் தம் இளமைக்காலத்து நிகழ்ச்சிகளைச் சொல்லக் கேட்டு நான்
மகிழ்ந்தேன். வந்தவர்களிடம் அவர்கள் விருப்பத்தின்படி திருப்பெருந்துறைப்
புராணச் செய்யுட்களைப் படித்துக் காட்டச் செய்து ஆசிரியர் பொருள்
கூறுவார். அவர்கள் கேட்டு அவருடைய கவித்துவம் எவ்வளவு
விருத்தியடைந்திருக்கிறதென்பதை அறிந்து புகழ்வார்கள்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள சிவஸ்தலங்களுக்கு நாங்கள் சென்று
வந்தோம். அந்த யாத்திரையில் ஒவ்வொரு நாளும் நான் புதிய புதிய
மனிதர்களையும் புதிய புதிய இடங்களையும் கண்டுகளித்துக் கவலை
எள்ளளவுமின்றி இருந்தேன். பிரயாண காலத்தில் ஸ்தல தரிசனம்
செய்யும்போது அந்த அந்த ஸ்தலத்து மூர்த்திகளின் பெருமைகளையும், ஸ்தல
வரலாறுகளையும் ஆசிரியர் மிகவும் விரிவாக எனக்குச் சொல்லுவார்.
அப்போது என் மனத்துக்கு மிக்க இன்பமாயிருக்கும். பல புஸ்தகங்களைப்
படித்தும் பல பெரியோர்களைக் கேட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய
அருமையான விஷயங்களை ஆசிரியர் சொல்லுகையில், “இதுவும் ஒரு சிறந்த
படிப்புத்தானே” என்று நான் எண்ணுவது உண்டு. சில வாரங்களுக்குப் பின்
ஆசிரியரும் நானும் பட்டீச்சுரம் வந்து சேர்ந்தோம்.

அத்தியாயம்-56

நான் இயற்றிய பாடல்கள்

தஞ்சை மார்ஷல் காலேஜ் தமிழ்ப்பண்டிதரும் என் ஆசிரியருடைய
மாணாக்கருமாகிய ஐயாசாமிப்பிள்ளையென்பவரும்