பக்கம் எண் :

காலேஜில் முதல் நாள் அனுபவம் 497

அத்தியாயம்-83

காலேஜில் முதல் நாள் அனுபவம்

கோபாலராவ் என்னை ஏற்றுக் கொண்டு கூறிய வார்த்தைகள் தியாகராச
செட்டியாரைப் பேருவகையில் ஆழ்த்தின. பல காலமாக யோசித்து வைத்து மிக
முயன்று பக்குவமாக என்னைத் திருவாவடுதுறை மடத்திலிருந்து அழைத்து
வந்தவராதலின் தம் முயற்சி பலிக்க வேண்டுமே என்பதில் அவருக்கு மிக்க
கவலை இருந்து வந்தது, எப்படியாவது தாம் நினைத்த காரியத்தை நிறைவேற்ற
வேண்டுமென்ற மனத்திண்மையுடன் அவர் முயன்று எண்ணியபடியே
நிறைவேற்றினார்.

என் வேண்டுகோள்

கோபாலராவ் எனக்கு உத்தரவு செய்ததை ஏற்றுக்கொண்ட நான்
மிகவும் பணிவாக அவரை நோக்கி, “நான் இந்த வேலைக்குப் புதியவன்.
காலேஜ் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையைச் சில
நாட்கள் என்னுடனிருந்து கற்பிக்க வேண்டுமென்று செட்டியாரவர்களுக்கு
அனுமதி அளிக்க வேண்டும்” என்ற கேட்டுக்கொண்டேன்.

செட்டியார், “இவர் சும்மா சொல்கிறார். மடத்திலிருந்து பெரிய
நூல்களைப் பாடம் சொன்ன இவருக்கு இங்கே பாடம் சொல்லுவது
லட்சியமன்று. என்னைக் காட்டிலும் பல விஷயங்களில் இவர் சமர்த்தர். ‘லக்ஷம்
பாடல்கள் வரையில் படித்திருக்கிறார்” என்று புன்முறுவலுடன் கூறினார்.

அப்பால் எல்லோரும் பிரின்ஸிபாலிடம் விடை பெற்றுச் சென்றோம்.
நான் குடும்பத்தை அழைத்து வரும் வரையில் தம்முடைய இல்லத்திலேயே
போஜனம் வைத்துக் கொள்ளலாம் என்று சாது சேஷையர் கூறியபடி
அங்கேயே தங்கி வந்தேன். அதுவரையில் அன்று நிகழ்ந்தவற்றையெல்லாம்
என் பெற்றோர்களிடமும் பண்டாரசந்நிதிகளிடமும் உசிதமாகத் தெரிவிக்கும்படி
என்னுடன் இருந்த கணபதி ஐயரைத் திருவாவடுதுறைக்கு அனுப்பினேன்.

பிள்ளையவர்கள் நினைவு

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (15-2-1880) காலையில் செட்டியாருடைய
வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.