பக்கம் எண் :

696என் சரித்திரம்

அவருக்கு என்னை இன்னாரென்று தெரியாது. அங்கே என்னுடனிருந்த
அன்பர்கள் ஒன்றும் விளங்காமல் விழித்தார்கள். இந்த அபவாதம் இன்னும்
எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்காகவே நான்
மேலும் மேலும் பல கேள்விகளைக் கேட்டேன். அவர் தம் வீட்டில் பல
அருமையான ஏடுகள் இருந்தனவென்றும் அவற்றை நான் கொண்டு
போய்விட்டதாகவும் உறுதியாகச் சொன்னார். என்னால் சிரிப்பை அடக்க
முடியவில்லை. மற்ற அன்பர்களுக்கு விஷயம் விளங்க வேண்டுமென்றெண்ணிச்
சொல்லத் தொடங்கினேன்.

‘இவர் என்னைத் தெரிந்து கொள்ளாமல் வீணான அபவாதம்
சுமத்துகிறார். நான் கடையநல்லூருக்குப் போனதுண்டு. இவர் வீட்டில் ஏடு
தேடியதும் உண்டு. ஆனால் இவர் சொல்லுவதுபோல அங்கே கணக்கில்லாத
ஏட்டுச் சுவடிகளை நான் காணவில்லை. அவ்வூருக்குப் போனவுடன் இவர் வீடு
ஒரு வித்துவான் வீடென்று தெரிந்து போய் விசாரித்தேன். வீட்டில் இருந்தவர்,
‘ஏடுகளெல்லாம் மச்சில் இருக்கின்றன’ என்றார். மேலே ஏறிப் பார்த்தேன்.
இரண்டு மூன்று பெட்டிகள் இருந்தன. பல காலமாகக் கவனிக்கப்படாமல்
இருந்தவையென்று அவற்றைப் பார்த்தவுடனே தெரிந்தது. ஒரு பெட்டியைத்
திறந்து கை வைத்தேன். எலிப் புழுக்கை மயமாக இருந்தது. எலி தமிழ் நூலை
உண்டு ஜீரணித்தது போக, விட்டு வைத்த துண்டுகளே அப்புழுக்கையோடு
இருந்தன. அந்தப் பெட்டிகளிலுள்ள சிதைந்த சுவடிகளையும் துண்டுகளையும்
எடுத்துத் தட்டிக் கொட்டிப் பார்த்தபோது அபூர்த்தியான சிந்தாமணி ஏடு
மாத்திரம் கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டேன். அந்தப் பெட்டிக்குள்
இருந்த வேறு பதார்த்தங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப்
போகிறேன். உண்மை இதுதான்!”

இவ்வாறு சொல்லி விட்டு, “நீங்கள் அப்போது அங்கே இருந்தீர்களா?”
என்று அந்த உபாத்தியாயரைக் கேட்டேன். சோர்ந்த முகத்தோடு அவர்,
“நான் தெரியாமல் சொல்லி விட்டேன். நான் அப்பொழுது அங்கே இல்லை.
விடுமுறைக்கு ஊர் போயிருந்தபோது என் வீட்டில் இருந்தவர்கள் அப்படிச்
சொன்னார்கள்” என்றார்.

“நல்ல வேளை. இந்த அபவாதத்தை என்னிடம் சொன்னதால் உண்மை
எல்லோருக்கும் விளங்கியது. வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால் நீங்கள்
சொல்லுவதை உண்மையாகவே எண்ணியிருப்பார்கள். நான் பிழைத்தேன்”
என்றேன்.

பிறகு விக்கிரமசிங்கபுரத்திலிருந்து ஒரு வண்டி வைத்துக் கொண்டு
ஊற்றுமலைக்குப் போனேன்.