பக்கம் எண் :

ஹிருதயாலய மருதப்பத் தேவர் 699

கண்ணுக்கு விருந்தாக இருந்தன. அங்கே பழகிய மனிதர்களும், வேலை
பார்க்கும் உத்தியோகஸ்தர்களும் மிகவும் திருத்தமாக இருந்தார்கள். மணிக்
கணக்குப் பிசகாமல் ஒவ்வொரு காரியமும் நடந்து வந்தது. ஹஜார வாசலில்
காலத்தைத் தெரிந்து கொள்வதற்கு மணற் கடிகாரம் வைத்திருந்தார்கள்.
இடங்களெல்லாம் திருத்தமாகவும் சுத்தமாகவும் இருந்தன.
உத்தியோகஸ்தர்களிற் பெரும்பாலோர் தமிழை நன்றாகப் படித்தவர்கள்.

காலப் போக்கு

ஹிருதயாலய மருதப்பத் தேவருடைய காலப் போக்கை உணர்ந்து நான்
வியப்படைந்தேன். விடியற்காலை நான்கு மணிக்கே அவர் எழுந்து விடுவார்.
காலைக் கடன்களை முடித்துக்கொண்டு பால் சாப்பிட்டு விட்டு 6 மணிக்குப்
புறத்தே உலாவுவதற்குப் பரிவாரங்களுடன் புறப்படுவார். யானைக்கூடம்,
குதிரைப்பந்தி, காளைகள் கட்டுமிடம் எல்லாவற்றையும் பார்வையிட்டுக்
கொண்டே செல்வார். ஊரைச் சுற்றியுள்ள சாலைகளில் ஒவ்வொரு சாலை
வழியாகச் சென்று உலாவி வருவார். அந்தச் சாலைகளெல்லாம் அவராலேயே
அமைக்கப்பட்டவை; இருபுறமும் மரங்களைப் பயிராக்கிச் சாலைகளை
ஒருங்காக வைத்திருந்தார். தோட்டங்கள் நல்ல முறையில் வளர்க்கப்பெற்று
வந்தன. உலாவிவிட்டு வந்து எட்டு மணி முதல் பத்துமணி வரையில் தமிழ்ப்
புலவர்களுடன் இருந்து தமிழ் நூல்களைப் படிப்பார். புதிய நூல்களைப்
படிப்பதோடு பழைய நூல்களையும் பன்முறை படித்து இன்புறுவார். அவருடன்
இருந்த வித்துவான்கள் நல்ல வித்துவப் பரம்பரையினர்; சில பிரபந்தங்களை
இயற்றியிருக்கிறார்கள்; பல வருஷ காலமாக அவருடைய ஆஸ்தான
வித்துவான்களாகவே இருந்தார்கள். பத்து மணிக்குமேல் கச்சேரிக் கட்டுக்குச்
சென்று ஸமஸ்தான சம்பந்தமான வேலைகளைக் கவனிப்பார். பிறகு ஸ்நானம்,
ஆகாரம் முதலியவற்றை முடித்துக் கொண்டு மீட்டும் பிற்பகல் இரண்டு
மணிக்குத் தமிழ் நூல் படிக்க உட்காருவார். நான்கு மணி வரையில்
படித்துவிட்டு ஆறு மணி வரையில் ஸமஸ்தான சம்பந்தமான வேலைகளைப்
பார்வையிடுவார். ஆறு மணிக்குமேல் தம்மைப் பார்க்க வந்தவர்களுக்குப்
பேட்டி அளிப்பார். தம் குடிகளுடைய குறைகளை விசாரிப்பார். அவர்கள்
அவற்றை ஓலையில் எழுதிய நீட்டுவார்கள். அவற்றையெல்லாம் பிறகு பார்த்து
மறுநாள் தம் கருத்தைச் சொல்லுவார். வேற்றூரிலிருந்து வந்தவர்களுக்குச்
சிறிதும் குறைவின்றி உபசாரம் நடைபெறும்.