பக்கம் எண் :

சிலப்பதிகாரப் பதிப்பு 703

பிரபந்தச் சுவடிகள்

அவருடன் சொக்கம்பட்டி முதலிய பல ஊர்களுக்குப் போனேன்.
அங்கங்கே பல வித்துவான்கள் வீடுகளைப் பார்த்தேன். வித்துவான்கள் பலர்
வறுமையால் வருந்துவதைக் கண்டு மிக வருந்தினேன். பழைய காலத்தில்
இருந்த ஜமீன்தார்கள் நிறுவிய தர்மஸ்தாபனங்களைப் பார்த்தேன்.
ஸம்ஸ்தானாதிபதிகளைப் பற்றியும் வித்துவான்களைப் பற்றியும்
பழங்கதைகளைச் சொல்லுவோர் அங்கங்கே இருந்தனர். சொக்கம்பட்டி ஜமீனில்
மந்திரியாக இருந்த பொன்னம்பலம்பிள்ளை என்பவருடைய திறமையை
விளக்கும் பல வரலாறுகளைக் கேட்டறிந்தேன்.

அப்பால் வாசுதேவநல்லூர், புளியங்குடி முதலிய ஊர்களுக்குப் போய்ப்
பழைய நூல்கள் உள்ளனவா என்று தேடினேன். புளியங்குடியில் புலவர்
கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த ஊரின் பழம் பெயர் பூழியன்குடி என்று
சொன்னார்கள். நான் அப்புலவர்களோடு பேசினேன். பல பழைய பாடல்களைச்
சொன்னார்கள். தங்களிடமுள்ள ஏட்டுச் சுவடிகளைக் காட்டினார்கள். பள்ளு,
குறவஞ்சி, குளுவ நாடகம், காதல், முளைப்பாட்டு, விதைப்பாட்டு, திருமுக
விலாசம் முதலிய பிரபந்தவகைகளே இருந்தன. அவற்றில் அப்போது என்
புத்தி செல்லவில்லை. ஆழ்ந்த தமிழ்ப் பயிற்சியும் சிறந்த கவித்துவமும்
மங்கியிருந்த காலத்தில் ஜமீன்தார்கள் மனத்துக்கு உவப்பு உண்டாக்கவேண்டி
இத்தகைய பிரபந்தங்களைப் புலவர்கள் இயற்றிப் பரிசு பெற்றார்கள். காப்பி
யகதியும் பழைய நூல் மரபும் புலவர்கள் ஆராய்ச்சிக்கு உட்படவில்லை.
சொல்லடுக்குகளும், சிருங்காரமுமே அந்தப் பிரபந்தங்களில் மீதூர்ந்து நின்றன.

தென்காசி நிகழ்ச்சி

பிறகு தென்காசிக்கு வந்தேன் நைடதம் முதலியவற்றை இயற்றிய
அதிவீரராமபாண்டியருடைய ஆசிரியர் வாழ்ந்து வந்த மடமொன்று அங்கே
உண்டு. அவ்விடத்திற் போய்ப் பார்த்தேன். எனக்கு வேண்டியது ஒன்றும்
கிடைக்கவில்லை. ஒரு வீட்டில் சுப்பையா பிள்ளை என்ற கனவான் ஒருவரைச்
சந்தித்தேன். அவர் தமக்குச் சில பழம் பாடல்கள் பாட முண்டென்று சொல்லி,

“உள்ளார் கொல்லோ தோழி சிள்ளெனப்
பருந்துவீழ்ந் தெடுத்த பைந்தலை யரவம்
காதறு கவண தேய்க்கும்
தீதுறு கள்ளியங் காடிறந் தோரே”