பக்கம் எண் :

சிலப்பதிகாரப் பதிப்பு 705

அடியார்க்கு நல்லாருரையிலுள்ள குறையைப் போக்கிக் கொள்ளுவதற்கு
நான் அலைந்த அலைச்சலும் பட்ட சிரமமும் கொஞ்சமல்ல, ஐம்பது
ஊர்களுக்கு மேல் பிரயாணம் செய்தேன். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை.
இனிமேல் பிரயாணத்தை நிறுத்திக் கொண்டு சிலப்பதிகாரத்தை அச்சிடற்குரிய
முயற்சிகளைச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தேன். உடனே சிறுவயல்
ஜமீன்தாருக்கெழுதித் திருமானூர்க் கிருஷ்ணையரைக் கும்பகோணத்திற்கு
வருவித்தேன். அவரையும் வேறு அன்பர்களையும் வைத்துக்கொண்டு முடிந்தது
முடித்தலாகப் பதிப்புக்கு வேண்டிய அங்கங்களைச் செப்பஞ் செய்யலானேன்.

அச்சுப் பிரதிகள்

சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தின் மூலத்தை மாத்திரம்
பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஸ்ரீநிவாச
ராகவாசாரியரென்பவர் முன்பு பதிப்பித்திருந்தார். ‘சேரமான் பெருமாணயனார்
இயற்றிய சிலப்பதிகாரம்’ என்று அவர் பதிப்பித்தார். 1880-ஆம் வருஷத்தில்
சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அக்காண்டத்தின் மூலத்தை அடியார்க்கு
நல்லார் உரையோடு அச்சிட்டார். இரண்டு பதிப்புக்களும், அக்காலத்தில்
சிலப்பதிகாரம் பாடமாக வந்தமையால் வெளியானவை. அவற்றிற் பல
வகையான பிழைகள் இருந்தன. செட்டியார், கடின நடையாயுள்ளனவற்றை
எளிய நடைகளாகச் செய்தும், வேண்டிய இடங்களில் விரித்துஞ் சுருக்கியும்,
கானல்வரிக்கு உரையின்மையால் உரையெழுதியும், அரங்கேற்று காதையுள்
வரம்பின்றிப் பரந்த இசை நாடக இலக்கணங்கள் பல விடங்களிலும் வருதலால்
ஆங்காங்குணர இங்குச் சுருக்கியும், அக்சிட்டதாக முகவுரையில்
தெரிவித்திருக்கிறார். அதனால் அடியார்க்கு நல்லாருரை முழுதும் அப்படியே
அப்பதிப்பில் அமைந் திருக்கவில்லை யென்பது தெரியவரும். அவர் மதுரைக்
காண்டத் தையும் அச்சிட முயன்றும் அது நிறைவேறவில்லை.

ஏட்டுப் பிரதிகள்

இந்த இரண்டு அச்சுப் பிரதிகளால் எனக்கு ஒரு நன்மையும்
உண்டாகவில்லை. நான் தேடித் தொகுத்தவற்றில் உரைப் பிரதிகள்
பதினான்கும் மூலப் பிரதிகள் எட்டும் இருந்தன. அவற்றை நன்கு
பரிசோதித்துத் தீர்மானமான பாடத்தைக் கைப்பிரதியில் அமைத்துக்
கொண்டேன். பிறகு நூலுக்கு அங்கமான பகுதிகளைத் தொகுக்கத்
தொடங்கினேன். தமிழ் நூற்பதிப்பில் நாளாக ஆக