பக்கம் எண் :

குன்னம் சிதம்பரம் பிள்ளை 85

அதற்குரிய நாளொன்றும் பார்த்து, அச்செய்தியைச் சிதம்பரம்
பிள்ளைக்குச் சொல்லியனுப்பினார்.

வண்டி நகர்ந்தது

நாங்கள் ஒரு நாள் விடியற் காலையில் புறப்பட்டுக் குன்னம் செல்வதாக
ஏற்பாடாகி இருந்தது. முதல் நாள் அரியிலூரில் எல்லோரிடமும் சொல்லிக்
கொண்டோம். புதிய ஊர்களைப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் அதிகமே;
ஆயினும் சடகோபையங்காரிடத்தில் பாடம் கேட்க முடியாதே என்று
வருந்தினேன். அதனை அறிந்த அவர், “நீ எப்போது வந்தாலும் இங்கே சில
தினம் இருந்து பாடம் கேட்கலாம்” என்று சொல்லி விடையளித்தார்.

எங்கள் பிரயாணத்திற்காக ஒரு வண்டி திட்டம் செய்து கொண்டு
குமரபிள்ளை வந்தார். செலவுக்கும் பணம் அளித்து அவர் விடை பெற்றுச்
சென்றார், விடிய ஐந்து நாழிகையளவில் எங்கள் வீட்டு வாசலில் வண்டி வந்து
நின்றது. என் தந்தையாரும் நானும் வீட்டை விட்டு வெளியே வந்தோம்.
தந்தையார் ஈசுவரப் பிரார்த்தனை செய்துகொண்டே என்னை எடுத்து
வண்டியில் உட்கார வைத்தார். அந்தச் சமயத்தில் பெருமான் கோயிற் பக்கம்
மேள வாத்தியத்தின் சத்தம் கேட்டது. தந்தையார் திரும்பிப் பார்த்தார்.
அங்கே காளிங்க நர்த்தன மூர்த்தியைப் படிச்சட்டத்தின் மீது
எழுந்தருளுவித்துக் கோயில் வாயிலில் தீபாராதனை செய்தார்கள். என்
தந்தையாருக்குப் மயிர்க்கூச்செறிந்தது. “நல்ல சகுனமாக இருக்கிறது.
தெய்வத்தை நம்பிப் பிரயாணப் படுகிறோம்” என்று அவர் மனமுருகிக்
கூறினார்.

பெருமாள் கோவிலுக்குத் திருப்பணி செய்வதற்காக அயலிலுள்ள
கிராமங்களுக்குச் சென்று பொருள் சேகரிக்க எண்ணிய கோவிலதிகாரிகள்
அதன் பொருட்டு அந்தக் கிருஷ்ண விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணி
ஸந்நிதிக் கெதிரில் நிறுத்தித் தீபாராதனை செய்தார்கள். அந்தச் சமயமும்
எந்தையார் என்னை வண்டியில் ஏற்றிய சமயமும் ஒன்றாக இருந்தன. கிருஷ்ண
பகவானது திருமுக மண்டலத்தை விளக்கிய அந்தக் கற்பூர ஒளி, “பழகிய
இடத்தை விட்டுவிட்டுப் புதிய இடத்திற்குப் போகிறோமே!” என்ற கவலையுடன்
இருந்த என் தந்தையாருடைய உள்ளத்தையும் விளக்கியது. எதிர் காலத்தைப்
பற்றி ஒன்றும் தெரியாத வாழ்க்கைப் பிரயாணத்தில் தெய்வத்தின் திருவருள்
துணை செய்யுமென்ற ஆறுதல் அவர் நெஞ்சிற் குடிகொண்டது.

என் தாயார் வண்டியில் ஏறினார்; தந்தையாரும் வண்டியில் அமர்ந்தார்.
குன்னத்தை நோக்கி எங்கள் வண்டி நகர்ந்தது.