பக்கம் எண் :

பிரிட்டோரியாவில் முதல் நாள் 141

Untitled Document
நீங்கள் வழக்குத் தொடுத்துவிடக்கூடாது என்றே கூறுகிறேன். சுகமாகப்
போய்ச் சேருங்கள்.  பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள் ஒரு கனவான்
என்பதைக் காண்கிறேன்.”

     இவ்விதம் கூறி அவர் எனக்கு டிக்கெட் கொடுத்தார். அவருக்கு
நன்றி செலுத்தினேன்.  தேவையான உறுதி மொழிகளையும் அவருக்கு
கொடுத்தேன்.

     என்னை வழியனுப்புவதற்காக சேத் அப்துல் கனி, ஸ்டேஷனுக்கு
வந்திருந்தார்.     இச் சம்பவம்    அவருக்கு       மகிழ்ச்சியையும்
ஆச்சரியத்தையும் அளித்தது. ஆனால்,  அவர் ஓர் எச்சரிக்கையையும்
செய்தார்.    “நீங்கள்      தொந்தரவில்லாமல் பிரிட்டோரியா போய்ச்
சேர்ந்தால்,     அது கடவுள் கிருபைதான்.  முதல் வகுப்பு வண்டியில்
உங்களைக் கார்டு      விட்டுவைக்க மாட்டார் என்றே அஞ்சுகிறேன்.
அவர்   விட்டு வைத்தாலும் பிரயாணிகள் விட்டுவைக்க மாட்டார்கள்”
என்றார்.

     முதல் வகுப்பு       வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.
வண்டியும்      புறப்பட்டு விட்டது.   ஜெர்மிஸ்டன் என்ற இடத்தில்
டிக்கெட்டுகளைப் பரிசோதிப்பதற்காகக்  கார்டு வந்தார். நான் அங்கே
இருப்பதைக்      கண்டதும் கோபம்  அடைந்தார். மூன்றாம் வகுப்பு
வண்டிக்குப் போய்விடுமாறு        விரலாலேயே சமிக்ஞை செய்தார்.
என்னிடம் இருந்த முதல் வகுப்பு டிக்கெட்டை அவரிடம் காட்டினேன்.
“அதைப்பற்றி     அக்கறையில்லை.   மூன்றாம் வகுப்பு வண்டிக்குப்
போய்விடு” என்றார்.

     அந்த வண்டியில்   என்னைத் தவிர     ஆங்கிலப் பிரயாணி
ஒருவரும்     இருந்தார்.   அவர் கார்டைக் கண்டித்தார்.  “அந்தக்
கனவானை ஏன் தொந்தரவு  செய்கிறீர்கள்? அவரிடம் முதல் வகுப்பு
டிக்கெட்     இருப்பதை நீர்   பார்க்கவில்லையா? அவர் என்னோடு
பிரயாணம் செய்வதைப்பற்றி எனக்குக் கொஞ்சமும்    ஆட்சேபமும்
இல்லை” என்றார்.   “பிறகு அவர்      என்னைப் பார்த்து, நீங்கள்
இருக்கும் இடத்திலேயே சௌகரியமாக இருங்கள்” என்றார்.

     “ஒரு கூலியுடன்   பிரயாணம் செய்ய    நீங்கள் விரும்பினால்
எனக்கு என்ன கவலை?” என்று கார்டு முணுமுணுத்தார்.

     இரவு எட்டு மணிக்கு ரெயில்    பிரிட்டோரியாவைச் சேர்ந்தது.

10. பிரிட்டோரியாவில் முதல் நாள்

     தாதா அப்துல்லாவின் அட்டர்னியிடமிருந்து யாராவது என்னைச்
சந்திக்கப்   பிரிட்டோரியா      ஸ்டேஷனுக்கு   வருவார்கள் என்று
எதிர்பார்த்தேன். குறிப்பாக    இந்தியர் எவருடைய வீட்டிலும் தங்கப்
போவதில்லை என்று நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.  ஆகையால்,
என்னைச் சந்திக்க இந்தியர் எவருமே ஸ்டேஷனுக்கு  வரமாட்டார்கள்
என்பது எனக்குத் தெரியும்
.