பக்கம் எண் :

300சத்திய சோதனை

Untitled Document
எடுத்துவிடுகிறேன்” என்று கூறினேன்.

     “வேண்டாம்,      அப்பா.     இந்த உலையிலிருந்து என்னை
இப்பொழுதே எடுத்துவிடுங்கள். வேண்டுமானால்,  அப்புறம் எனக்குச்
சுற்றிவிடுங்கள்” என்றான்.

     வேறு பேச்சுக்கொடுத்துக்கொண்டே மேலும்    சில நிமிடங்கள்
அப்படியே போர்த்தியவாறு அவனை     வைத்திருந்தேன். வேர்வை
அவன்      தலையிலிருந்து      அருவியாக வழிந்தது. அவனுக்குச்
சுற்றியிருந்த துணிகளையெல்லாம் எடுத்துவிட்டு,   உடம்பு உலரும்படி
செய்தேன். ஒரே படுக்கையில் தகப்பனும் மகனும் தூங்கிப் போனோம்.

     இருவரும் மரக்கட்டைபோலவே தூங்கினோம்.        மறுநாள்
காலையில் மணிலாலுக்குச் சுரம் குறைந்திருந்தது. இவ்விதம்   நாற்பது
நாட்கள் நீர் கலந்த பாலும்   ஆரஞ்சு  ரசமுமே சாப்பிட்டு வந்தான்.
இப்பொழுது அவனுக்குச் சுரம் இல்லை. அது மிகவும்   பிடிவாதமான
வகையைச் சேர்ந்த சுரம். ஆயினும், அது      கட்டுப்படுத்தப்பட்டு
விட்டது.

     என் புதல்வர்களில் மணிலாலே இன்று       நல்ல தேக சுகம்
உள்ளவனாக இருக்கிறான். அவன் பிழைத்தது கடவுள் அருளினாலா?
அல்லது நீர்ச் சிகிச்சையாலா?         இல்லாவிட்டால் ஆகாரத்தில்
எச்சரிக்கையுடன் இருந்தாலும் நல்ல பணி விடையாலுமா? இதில் எது
என்று யாரால் சொல்ல முடியும்? அவரவர்கள்  தத்தம் நம்பிக்கைக்கு
ஏற்ற       வகையில் முடிவு     செய்து கொள்ளட்டும். என்னைப்
பொறுத்தவரையில் என் மானத்தைக்       கடவுளே காப்பாற்றினார்
என்றுதான் நான் நிச்சயமாக எண்ணுகிறேன்.       அந்த நம்பிக்கை
இன்றளவும் எனக்கு மாறாமல் இருந்து வருகிறது.

23 மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு

     மணிலாலுக்கு    உடம்பு குணமாகிவிட்டது. ஆனால், கீர்காமில்
குடியிருந்த வீடு,   வசிப்பதற்கு ஏற்றது அல்ல என்பதைக் கண்டேன்.
அது ஈரம் படிந்த வீடு; நல்ல    வெளிச்சமும் இல்லை. எனவே, ஸ்ரீ
ரேவாசங்கர் ஜகஜ் ஜீவனுடன்    கலந்து ஆலோசித்து, பம்பாய்க்குச்
சுற்றுப் புறத்தில் காற்றோட்டமான     ஒரு பங்களாவை வாடகைக்கு
அமர்த்திக்கொள்ளுவது என்று தீர்மானித்தேன். பாந்தராவிலும் சாந்தா
குருஸிலும் தேடி அலைந்தேன்.         பாந்தராவில் மிருகங்களைக்
கசாப்புக்கடைக்காகக்        கொல்லுமிடம் இருந்ததால் அந்த இடம்
வேண்டாம் என்று முடிவு செய்தோம்.   கட்கோபரும் அதை அடுத்த
இடங்களும் கடலுக்கு    வெகு தொலைவில் இருந்தன. கடைசியாகச்
சாந்தா குருஸில் ஓர்   அழகான பங்களா கிடைத்தது. சுகாதாரத்தைப்
பொறுத்த வரையில் அதுவே மிகச் சிறந்தது