பக்கம் எண் :

400சத்திய சோதனை

Untitled Document
அதுவே எல்லாமும் அல்ல. உடலோடு சேர்ந்து  உள்ளமும் பட்டினி
விரதத்தை அனுஷ்டிக்காவிட்டால்,         அது நயவஞ்சகத்திலும்,
அழிவிலுமே முடியும்.

32 பள்ளி ஆசிரியனாக

     தென்னாப்பிரிக்கச்   சத்தியாக்கிரகச் சரித்திரத்தில் சொல்லாத
அல்லது          சுருக்கமாக மாத்திரம் குறிப்பிட்டுச் சென்றுவிட்ட
விஷயங்களை மட்டுமே நான்        இந்த அத்தியாயங்களில் கூறி
வருகிறேன் என்பதை வாசகர்கள்     நினைவில் வைத்திருப்பார்கள்
என்று நம்புகிறேன்.           அப்படி நினைவில் வைத்திருந்தால்,
சமீபத்திய        அத்தியாயங்களுக்கிடையே இருக்கும் தொடர்பை
அவர்கள் எளிதில் காண முடியும்.

     பண்ணை வளர்ந்து வரவே     அதிலிருந்த சிறுவர்களுக்கும்,
சிறுமிகளுக்கும் படிப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்தாக  வேண்டியது
அவசியமாயிற்று. இவர்களில் ஹிந்து,   முஸ்லிம், பார்ஸி, கிறிஸ்தவச்
சிறுவர்களும், சில ஹிந்துப் பெண்களும் இருந்தனர். இவர்களுக்குத்
தனியாக உபாத்தியாயர்களை வைப்பது சாத்தியமல்ல.     அப்படிச்
செய்வது அவசியம் என்று நான் எண்ணவுமில்லை.    தகுதி பெற்ற
இந்தியப் பள்ளி       ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. ஆகையால்,
ஆசிரியர்களை           நியமிப்பது சாத்தியமில்லை. அப்படியே
ஆசிரியர்கள்          கிடைத்தாலும்,      குறைந்த சம்பளத்தில்
ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து        21 மைலுக்கப்பால் போக யாரும்
தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்க எங்களிடம்
பணமும்  ஏராளமாக இல்லை. மேலும் பண்ணைக்கு வெளியிலிருந்து
உபாத்தியாயர்களை இறக்குமதி       செய்யவேண்டியது அவசியம்
என்றும் நான் கருதவில்லை.     அப்பொழுது நடை முறையிலிருந்த
கல்வி முறையிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அனுபவத்தினாலும்,
சோதனைகளினாலும்,       உண்மையானதொரு கல்வி முறையைக்
கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும்      எனக்கு இருந்தது.
ஒன்றை மாத்திரம் நான் அறிவேன். அதாவது,    மிகவும் சிறப்பான
ஒரு   நிலையில் பெற்றோரினாலேயே     உண்மையான கல்வியை
அளிக்க முடியும்.        இதற்கு வெளி உதவி மிகக் குறைவாகவே
இருக்கவேண்டும்.  டால்ஸ்டாய் பண்ணையோ ஒரு குடும்பம். அதில்
தந்தையின் ஸ்தானத்தை            நான் வகித்தேன். ஆகையால்,
சிறுவர்களுக்குப் பயிற்சி      அளிக்கும் பொறுப்பைச் சாத்தியமான
வரையில் நானே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

     மேற்கண்ட யோசனையில் குறைகளும்    இல்லாமல் இல்லை.
எல்லா இளைஞர்களும்     சிறு வயதிலிருந்தே என்னுடன் இருந்து
வந்தவர்களல்ல. அவர்கள் மாறுபட்ட   நிலையிலும், சூழ்நிலையிலும்
வளர்ந்தவர்கள் அவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல.