பக்கம் எண் :

53

Untitled Document
சொன்னார். நாங்களும் ஒப்புக் கொண்டோம். திங்கட்கிழமை எங்கள்
சாமான்கள் வந்து சேர்ந்ததும் ஹோட்டல் கணக்கைத் தீர்த்து விட்டு,
சிந்தி நண்பர் எங்களுக்காக வாடகைக்கு அமர்த்திய    அறைகளில்
இருக்கப் போய்விட்டோம்.          ஹோட்டலுக்கு நான் 3 பவுன்
கொடுக்கவேண்டி வந்தது! அந்தத்    தொகையைக் கண்டதும் நான்
அதிர்ச்சியடைந்தேன் என்பது எனக்கு    நினைவிருக்கிறது. செலவு
இவ்வளவு அதிகமாக    இருந்ததே ஒழிய,   அங்கே நான் எதுவும்
சாப்பிடாமல்      பட்டினி கிடந்தேன்  என்றே சொல்ல வேண்டும்!
அங்கே  கொடுத்த சாப்பாட்டில் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை.
ஓர்  உணவு வகை எனக்குப் பிடிக்கவில்லை என்று வேறொன்றைக்
கொண்டுவரச் சொன்னால், இரண்டுக்கும் சேர்த்துப் பணம் கொடுக்க
வேண்டி வந்தது.     இதெல்லாம் இப்படி இருக்க,       உண்மை
என்னவென்றால் பம்பாயிலிருந்து கொண்டு வந்த  ஆகாராதிகளைக்
கொண்டே நான் காலம் கழிக்கலானேன்.

     புது அறையிலும் எனக்கு மன    நிம்மதியே இல்லை. வீட்டு
நினைவும், நாட்டு நினைவுமே எனக்கு     இடைவிடாமல் இருந்து
கொண்டிருந்தன. என் அன்னையின்        அன்பு அடிக்கடி என்
நினைவுக்கு வரும். இரவில்       கண்ணீர் பெருகி, கன்னங்களில்
அருவியாக வழியும். வீட்டைப் பற்றிய    எல்லாவித நினைவுகளும்
வந்துவிடவே         தூங்கவே   முடியவில்லை. என் துயரத்தை
யாரிடமாவது    சொல்லி ஆறுதல் அடையலாம் என்றால் அதற்கும்
வழியில்லை. என் துயரத்தை      யாரிடமாவது  சொல்லிக்கொள்ள
முடிந்திருந்தாலும் அதனாலும்     ஒரு பயனும் இராது.  ஏனெனில்,
எனக்கு எதுவும் ஆறுதல் அளிக்க       முடியாது என்பதை நான்
அறிவேன்.   மக்கள்,    அவர்களுடைய     பழக்க வழக்கங்கள்,
அவர்களுடைய      வீடுகள் எல்லாமே   விசித்திரமாக இருந்தன.
ஆங்கில மரியாதை முறைகள் விஷயத்திலோ எனக்கு    எதுவுமே
தெரியாது.       ஆகையால்,   எங்கே தவறு செய்துவிடுவேனோ
என்பதற்காக      எப்பொழுதும்   எச்சரிக்கையாகவே   இருக்க
வேண்டியிருந்தது.   சைவ உணவு விரதமோ அதிகப்படியானதோர்
அசௌகரியம்.         நான் சாப்பிடக்கூடிய ஆகார வகைகளும்
ருசியற்றவைகளாகவும் சப்பென்றும் இருந்தன. எனவே, இருதலைக்
கொள்ளி எறும்புபோல் ஆனேன். இங்கிலாந்து வாசத்தை என்னால்
சகிக்க முடியவில்லை.  ஆனால்,   இந்தியாவுக்குத் திரும்பிவிடுவது
என்பதையோ    நினைக்கக்கூட முடியாது. வந்தது வந்துவிட்டேன்;
மூன்று ஆண்டுகள் இருந்து        முடித்துவிட வேண்டும் என்று
கூறியது, என் அந்தராத்மா.