பக்கம் எண் :

596சத்திய சோதனை

Untitled Document
42 அதன் அலை எழுச்சி

     கதர் இயக்கம் அடைந்த          அபிவிருத்தியைக் குறித்து
விவரிப்பதற்கு மேலும்             சில அத்தியாயங்களை எழுதிக்
கொண்டிருக்கக் கூடாது. நான்      பற்பல காரியங்களில்  ஈடுபட்டு
இருந்திருக்கிறேன். அவை பொதுஜனங்களுக்கு   நன்றாகத் தெரிந்த
பிறகு அவற்றின் சரித்திரத்தைக் குறித்து இந்த    அத்தியாயங்களில்
நான் கூறிக்            கொண்டிருப்பது இவற்றின் நோக்கத்திற்கே
புறம்பானதாகும். நான் செய்யும் காரியங்கள்      ஒவ்வொன்றையும்
எழுதிக் கொண்டிருந்தால்,              அதற்கே தனி நூல் எழுத
வேண்டியிருக்கும்.    அதை முன்னிட்டே     அம்முயற்சியை நான்
செய்யக்கூடாது. என்னுடைய      சத்திய சோதனையின் ஊடே சில
விஷயங்கள்,      தாமே வந்தவைகளைப் போன்றே எனக்கு எப்படி
வந்து சேர்ந்தன என்பதை விவரிப்பதுதான்  இந்த அத்தியாயங்களை
நான் எழுதுவதன் நோக்கம்.

     ஆகவே, ஒத்துழையாமை இயக்கக்   கதைக்கே திரும்புவோம்.
அலி சகோதரர்கள் ஆரம்பித்த பலம் பொருந்திய கிலாபத் கிளர்ச்சி
தீவிரமாக நடந்துவந்த  சமயத்தில், அகிம்சை விதியை ஒரு முஸ்லிம்
எந்த அளவுக்கு அனுசரித்து   நடக்க முடியும் என்ற விஷயத்தைக்
குறித்து மௌலானா அப்துல் பாரி       முதலிய உலாமாக்களுடன்
நான்               விரிவாக விவாதித்தேன். இஸ்லாம், தன்னைப்
பின்பற்றுகிறவர்கள்      அகிம்சை கொள்கையாக அனுசரிப்பதைத்
தடுக்கவில்லை என்றும், அக்கொள்கையை       அனுசரிப்பதென்று
அவர்கள் விரதம் கொண்டிருக்கும்போது அந்த விரதத்தை அவர்கள்
நிறைவேற்றக்         கடமைப்பட்டிருக்கிறார்கள் என்றும் முடிவாக
எல்லோரும்          ஒப்புக்கொண்டார்கள். கடைசியாகக் கிலாபத்
மகா நாட்டில் ஒத்துழையாமைத்      தீர்மானம் கொண்டுவரப்பட்டு,
நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேறியது.        ஒரு சமயம்
அலகாபாத் கூட்டத்தில் இந்த        விஷயத்தின்மீது இரவெல்லாம்
விவாதம் நடந்தது, எனக்கு இன்னும்     நன்றாக நினைவிருக்கிறது.
‘அகிம்சையோடு கூடிய   ஒத்துழையாமை, காரிய சாத்திய மாகுமா?’
என்பதில் காலஞ்சென்ற ஹக்கீம் சாகிபுக்கு ஆரம்பத்தில் சந்தேகமே
இருந்தது. ஆனால், அவருடைய சந்தேகம் நீங்கிய   பின்னர் அந்த
இயக்கத்தில் அவர் முழு மனத்துடன் ஈடுபட்டார்.     அவர் உதவி,
இயக்கத்திற்கு மதிப்பிடற்கரிய பலனை அளித்தது.

     அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பிறகு        குஜராத் ராஜீய
மகாநாட்டில் ஒத்துழையாமை தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன்.
அதை எதிர்த்தவர்கள்,         பூர்வாங்கமாக ஓர் ஆட்சேபத்தைக்
கூறினார்கள். இதைப்பற்றிக் காங்கிரஸ்      ஒரு முடிவு செய்வதற்கு
முன்னால், இத்தீர்மானத்தை       நிறைவேற்றுவதற்கு ஒரு மாகாண
மகாநாட்டுக்குத் தகுதி கிடையாது என்பது   அவர்களுடைய வாதம்.