பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்1

தமிழ்நாட்டின்
வரலாற்றுச் சுருக்கம்

நமது இந்திய நாடு 22 மாநிலங்களையும் மத்திய அரசின்
நேரடி ஆட்சிக்குட்பட்ட 9 பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்திய
நாட்டின் 22 மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். இத்திருநாடு
‘திராவிடம்’, ‘திரமிளம்’, ‘திரமிழம்’, ‘தமிழகம்’, ‘தமிழ்நாடு’
என்ற பெயர்களால் அறியப்பட்டு வந்தது. பண்டைக்காலம்முதல்
இன்று (1982) வரை உள்ள தமிழ்நாட்டின் வரலாற்றுச் சுருக்கம்
இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும் மிகத் தொன்மை
வாய்ந்தனவாகும். அத்திரம்பாக்கம், ஆதிச்சநல்லூர், சாயர்புரம்
மைசூரின் பிரம்மகிரி, கோவை மாவட்டப் பெருங்கற்குழிகள்,
சித்தூர் மாவட்டப் பையம்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டத்
தாயினிப்பட்டி, வட ஆர்க்காடு வட்டக் கரிக்கந்தாங்கல்,
செங்கற்பட்டு வட்டக் குன்னத்தூர் இன்னும் தமிழகத்தின் பல
இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருள்களிலிருந்து
தமிழ்நாட்டின் பண்பாட்டின் தொன்மை, வரலாற்றுக் காலத்திற்கு
முந்திய காலத்திலிருந்து இருந்து வருவதை அறியலாம்.

பழந்தமிழகம், வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி
வரையும் மேற்கே அரபிக்கடலிலிருந்து கிழக்கே வங்கக் கடல்
வரையும் பரவியிருந்தது.