பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்115

11. கும்பகோணம்

தமிழ்நாட்டிலுள்ள கோவில் மாநகரங்களில் ஒன்று
கும்பகோணம்
ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்
நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இந்நகர் உள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பழைய நகரங்களில் இந்நகர் ஒன்றாகும்.
இந்நகரின் ஆதிப்பெயர்கள். குடமூக்கு, குடந்தை ஆகும்.
இந்நகரிலும், இந்நகர் அருகிலும் உள்ள புகழ்பெற்ற சைவ,
வைணவ ஆலயங்கள்பற்றி இப்பகுதியில் சிறிது கூறப்பட்டுள்ளது.

நாகேஸ்வர சுவாமி கோவில்

கும்பகோணத்திலுள்ள கோவில்களில் மிகவும்
பழமையானதாகக் கருதப்படுவது நாகேஸ்வர சுவாமி
கோவிலாகும். ‘குடந்தைக் கீழ்க்கோட்டம்’ என இது
குறிப்பிடப்படுகிறது. இது தஞ்சையை ஆண்ட ஆதித்த
சோழன்
காலக் கோவிலாகும். இறைவன் நாகேஸ்வரர் ஆவார்.
அம்மன் பெரிய நாயகி எனப்படுகிறார். மூல லிங்கத்தில்
சூரியனது கதிர்கள் சித்திரை மாதத்தில் 11, 12, 13 தேதிகளில்
விழும்படியாகக் கருவறை கட்டப்பட்டுள்ளது.

நாகேஸ்வர சுவாமி கோவிலின் சிறப்புமிக்க அம்சம்,
இங்குள்ள நடராசர் சந்நிதி முன்னுள்ள மண்டபம் ஆகும்.
இம்மண்டபத்தின் இரு பக்கங்களிலும் பெரிய கல் சக்கரங்கள்
பொருத்தப்பட்டுள்ளன. 2 குதிரைகள், யானைகள்,
பாகர்களுடன் ஸ்ரீ நடராசர் இம்மண்டபத்தை இழுத்துச்
செல்வதுபோல் காட்சியளிக்கிறது. தேரின் அமைப்பைக்
கொண்டுள்ள இம்மண்டபம் ஒரு உயரிய கலைப்படைப்பு ஆகும்.