பக்கம் எண் :

190தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

19. ஈரோடு

இன்றைய ஈரோடு நகர் பண்டைய கொங்கு நாட்டின் ஒரு
பகுதியாகும். சேர மன்னர்கள் கங்கர்கள், பிற்காலச் சோழ,
பாண்டிய மன்னர்கள், ஒய்சாளர்கள், விஜய நகர மன்னர்கள்
ஆகியோரின் ஆட்சியில் இப்பகுதி இருந்தது. பின், மதுரை
நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும், மைசூர் மன்னர்கள்
ஆட்சியிலும் இப்பகுதி இருந்தது. மைசூர் மன்னர் சிக்க
தேவராயர்
தெற்கில் படையெடுத்தபொழுது அவருக்கும்
மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதருக்கும், ஈரோட்டுக்கு
அருகில் போர் நடந்தது. இப்போரில் சொக்கநாதர் வெற்றி
பெற முடியாமல் ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளை மைசூர்
மன்னரிடம் இழக்க வேண்டியதாயிற்று (கி.பி. 1676).

மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆட்சிக் காலத்தில்
ஈரோடு செழிப்புமிக்க நகராக விளங்கிற்று. ஆனால், மராத்தியர்,
ஆங்கிலேயர் படையெடுப்புகளினால் இந்நகர் பெரிதும்
சேதமுற்றுப் பின் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மீண்டும்
சிறப்புப் பெற்றது. இந்நகர் கி.பி. 1871இல் நகராட்சி ஆயிற்று.
இந்நகரிலிருந்த பாழடைந்த கோட்டைப் பகுதிகள்
கி.பி. 1877இல் நீக்கப்பட்டன.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த தாராபுரம்,
ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி, சத்தியமங்கலம்,
வட்டங்களும், காங்கேயம் துணை வட்டமும் அடங்கிய
பகுதிகள் பிரிக்கப்பட்டு, ‘பெரியார் மாவட்டம்’ என்ற புதிய
மாவட்டம் அமைக்கப்பட்டது. 17-9-1979இல் இப்புதிய மாவட்டம்
உருவானது. பெரியார் மாவட்டத்தின் தலைமையிடமாக ஈரோடு
நகர் விளங்குகிறது.