|
கோயம்புத்தூர் நகரின் பண்பாட்டுச் சின்னங்கள்
இந்துக்கோவில்கள்
கோவை மாநகரில் உள்ள இந்துக் கோவில்களுள்
மிகப் பழமையானதாகக் கருதப்படுவது கோட்டை ஈஸ்வரன்
கோவில் ஆகும். ‘கோட்டை’ என்ற சொல் இக்கோவிலின்
பகுதியில் கோட்டை முன்பு இருந்ததைக் குறிக்கிறது. சங்கீஸ்வரர்
என்ற ஈஸ்வரன் கோவில் பிற்காலத்தில் சங்கமேஸ்வர கோவில்
என்ற பெயரைப் பெற்றது. இன்றைக்குச் சுமார் 1050 ஆண்டுகளுக்கு
முன்பு இக்கோவில் உருவானதாக அறியப்படுகிறது. கரிகால சோழ
தேவன் என்ற மன்னர் (கி.பி. 9ஆம் நுற்றாண்டு) இக்கோவிலின்
தோற்றத்திற்குக் காரணமாயிருந்தார் எனப்படுகிறது. கோவை
மாவட்டத்தின் முதல் ஆட்சியாளரான காரே என்பவர்
இக்கோவிலின் பகுதியிலிருந்த இடிந்தக் கோட்டைப் பகுதிகளை
நீக்கி, இக்கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உதவினார்
(கி.பி.1809) என்று தெரிய வருகிறது.
கோட்டை ஈஸ்வரன் கோவில், இதனருகிலுள்ள
கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோனியம்மன்
கோவில்
ஆகிய இம்மூன்று கோவில்களும் அமைந்துள்ள நகர்ப்பகுதியே
ஆதி கோவன் புத்தூர் கிராமம் எனப்படுகிறது.
கோனியம்மன், கோயம்புத்தூரை ஆட்சி புரிந்த
கோவனுக்குக் குலதெய்வம் என்பர். இக்கோவில் சுமார் 900
ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
அவினாசி சாலையில்
தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்
தோற்றுவிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
ராஜ வீதி முடியும் இடத்தில் நகரின் மேற்குப்பகுதியில்
பெருமாள் கோவிலும், இதையடுத்து யோக ஆஞ்சநேயர்
கோவிலும் உள்ளன. யோக ஆஞ்சநேயர் கோவிலின்
முன்பாக இராகவேந்திர சுவாமியின் நினைவு மண்டபம் உள்ளது.
|