பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்235

12. கோபுரவாயிற் கதவுகள், திருக்கல்யாண மண்டபம்,
இரதங்கள் ஆகியவற்றில் மரவேலைப்பாடு நிறைந்த சிற்பங்கள்
உள்ளன.

13. புது மண்டபம் ‘சிற்ப விருந்தளிக்கும்’ மற்றொரு
மண்டபமாகும். சுந்தரேசுவரர் சந்நிதிக் கோபுர வாயிலுக்கு
எதிரில் இம்மண்டபம் உள்ளது. மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு
வைகாசி வசந்தவிழா நடத்தும் பொருட்டுத் திருமலை மன்னர்
இம்மண்டபத்தைக் கட்டினார்(1635). இம்மண்டபம் முற்றிலும்
கல்லினால் கட்டப்பட்டுள்ளது. சிவபெருமானின் பல்வேறு
தோற்றங்கள், திருவிளையாடல் காட்சிகள், ‘தடாதகை’
மீனாட்சியின் உருவம், குதிரை வீரர்கள் சிற்பங்கள்

இன்னும் பல வியத்தகு சிற்பங்கள் ஆகியவற்றைப் புது
மண்டபம் கொண்டுள்ளது. திருமலை மன்னர் காலக் சிற்பிகளின்
உன்னத உளி வேலைப் பாட்டினால் இம்மண்டபம்
உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிற்ப, கட்டடக்
கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இம்மண்டபம்
விளங்குகிறது. இம்மண்டபத்தின் நடுவில் நாயக்க மன்னர்களின்
உருவச்சிலைகள் அவர்களது மனைவியருடன் இயற்கையான
தோற்றத்தைக்கொண்டு விளங்குகின்றன.

புது மண்டபச் சிற்பங்கள், ஆயிரங்கால் மண்டபச் சிற்பங்கள்,
கம்பத்தடி மண்டபச் சிற்பங்கள், மீனாட்சி கோவிலின் இதர பல
சிற்பப் படைப்புகள் யாவும் நமது அரிய கலைச் செல்வங்களாகும்.

1963ஆம் ஆண்டிலும், 1974ஆம் ஆண்டிலும்
மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலின் சிறப்புமிக்க குடமுழுக்கு
விழா நடைபெற்றுள்ளன.

சித்திரைத் திருவிழா மதுரை நகரில் ஒவ்வொரு
வருடமும் நடைபெறும் மாபெரும் விழாவாகும். இவ்விழா
தமிழ்நாட்டிலேயே மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
இவ்விழாவின்பொழுது இறைவி மீனாட்சியின் பட்டாபிஷேகம்,
திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், ஸ்ரீ கள்ளழகர்
வைகையாற்றில் இறங்குதல்
ஆகியவை நடைபெறுகின்றன.
‘திருவிழா நகரான’ மதுரையில் தலைசிறந்த விழா சித்திரைத்
திருவிழா ஆகும்.