பக்கம் எண் :

266தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

மாவட்டத்தின் தலைமையிடமாகப் புதுக்கோட்டை நகர்
விளங்கிவருகிறது. புதுக்கோட்டை மன்னரின் புதிய
அரண்மனையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரின்
அலுவலகங்கள் செயல்படுகின்றன. புதுக்கோட்டை நகரின் நடுவில்
ராஜ வீதியையடுத்து அமைந்துள்ள கோட்டைப்பகுதிகள், பழைய
அரண்மனை,
பழைய அரண்மனையிலிருந்து சுமார் 2 கி.மீ.
தொலைவிலுள்ள புதிய அரண்மனை, மன்னர் கலைக் கல்லூரியாக
விளங்கும் கட்டடம், அதனருகிலுள்ள தமிழக அரசின் பொது
அலுவலகங்கள் உள்ள கட்டடம் ஆகியவை புதுக்கோட்டை
சமஸ்தானத்தின் அழகிய சில நினைவுச் சின்னங்களாகும். தமிழக
அரசின் பொது அலுவலகங்கள் (கருவூலம் முதலியவை)
அமைந்துள்ள கட்டடம்முன் புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட
பைரவத் தொண்டைமானின் 25 ஆண்டு வெள்ளிவிழா ஆட்சியைப்
(1886-1911) பெருமைப்படுத்தும் நினைவாக, அம்மன்னரின் அழகிய
சிலை காட்சியளிக்கிறது.

திருக்கோகர்ணம்: புதுக்கோட்டை நகரிலிருந்து 3 கி.மீ.
அல்லது புதிய அரண்மனையிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில்
புதுக்கோட்டை-திருச்சி சாலையில் திருக்கோகர்ணம் உள்ளது.
இங்கு கோகர்ணேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில்
பழம்பெருமை வாய்ந்தது. காமதேனுப் பசு தன் காதுகளில்
நீர் கொண்டுவந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ததால்
இத்தலத்திற்கு கோகர்ணம் (கோ = பசு, கர்ணம் = காது) என்ற
பெயர் வந்ததாகப் புராணம் கூறுகிறது.

கோவிலின் மூலத்தானம், திருக்கோகர்ண மலையின்
அடிவாரத்தில் ஒரு பகுதியைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.
கருவறை உள்ள குகையில் மூர்த்திகளும் தூண்களும் மலைப்
பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. குகையின்
நடுவில் கோகர்ணேஸ்வரர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
கருவறைக்கு வெளியில் வடபுறம் கங்காதரர் திருவுருவமும்.
தெற்கில் விநாயகர் திருவுருவமும் பெரிய அளவில்
மலைப்பாறையைச் செதுக்கி வடிக்கப்பட்டுள்ளன.