பக்கம் எண் :

332தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

33. எட்டையாபுரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டி நகரிலிருந்து
14 கி.மீ. தொலைவில் எட்டையாபுரம் உள்ளது. இன்றைய
எட்டையாபுரத்தை கி.பி. 1567இல் ஜெகவீர குமார எட்டப்ப
நாயக்கர் தோற்றுவித்தார். இவரது முன்னோர்கள் முதலில்
சந்திரகிரியில் (ஆந்திராவில்) வாழ்ந்தனர். பின்
எட்டையாபுரத்திற்கு அருகிலுள்ள முதுகுடி நாடு என்ற
‘இளசை நாட்டில் குடியேறி வாழ்ந்தனர். குறுநில மன்னர்களாக
விளங்கிய இவர்கள் மதுரை நாயக்க மன்னர்களுக்கு ஒரு
தொகையை வரிப்பணமாகக் கட்டிவிட்டு, தங்கள்
பிரதேசத்தைத் தன்னுரிமையுடன் ஆட்சி புரிந்தனர்.

ஜெகவீரராம வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர்
எட்டையாபுரத்தை ஆட்சிபுரிந்த மன்னர்களில் (1705-1725)
குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இவர் கி.பி. 1710இல்
எட்டையாபுரத்தில் ஒரு வைணவ ஆலயத்தைக் கட்டினார்.
புகழ்பெற்ற கடிகை முத்துப்புலவர் இம்மன்னரது அவைப்புலவராக
இருந்தார். ‘சீறாப்புராணம்’ இயற்றிய உமறுப்புலவர் இவரது
மாணவர் ஆவார்.

ஆர்க்காட்டு நவாப் முகமதலியின் ஆட்சிக் காலத்தில்,
கான்சாகிப்
என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி
தளபதியின் உதவியுடன் குருமலை பாளையக்காரர்,
குருமலைத்துரை
எட்டையாபுரத்தின் ஆட்சி உரிமையையும்
பெற்றார். இதனால் எட்டையாபுர மன்னர் சிறிது காலம்
‘பெருநாழி’யில் வாழ்ந்தார். வெங்கடேஸ்வர எட்டப்பன்
என்பவர் குருமலைத்துரையிடமிருந்து தமது ஆட்சிப் பகுதியை
மீட்கக் கான் சாகிப் படைகளுடன் போர்களில் ஈடுபட்டார்.
பெத்த நாயக்கனூர் கோட்டைப் போரின்பொழுது எட்டையாபுர
மன்னரின் படைகள், கான் சாகிப் படையினரால் பெரும்
சேதத்திற்கு உள்ளாயின. எட்டையாபுரத்தை மீட்ட
வெங்கடேஸ்வர எட்டப்பர் வாரிசு இன்றி இறந்ததால்
எட்டையாபுரம் மீண்டும் குருமலைத் துரை ஆட்சியின்கீழ்
வந்தது.