பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்371

இவ்வாலயத்தின் நிர்மாணத்தில் அரும்பணி புரிந்தவர்
மணப்பாட்டைச் சேர்ந்த மத்தேயு மிராந்தா ஆவார்.

4. பரிசுத்த ஆவி ஆலயம்

மணப்பாட்டில் கத்தோலிக்க சமயத்தினரின் மற்றொரு
புகழ்மிக்க ஆலயம் பரிசுத்த ஆவி ஆலயமாகும். 1851, 1886,
1913 ஆகிய ஆண்டுகளில் இவ்வாலயம் அமைக்கும் பணி
நடந்துள்ளது. இவ்வாலயத்தின் பலிபீடம் முற்றிலும்
பளிங்கினால் ஆனதாகும்.
இதை இவ்வாலயத்திற்கு
அளித்தவர்கள் J.S விக்டோரியா குடும்பத்தினர் ஆவர்.
பலிபீடத்தின் அடியிலுள்ள இயேசுவும் அவரது 12 சீடர்களும்
உணவருந்தும் சிற்பக் காட்சி வியக்கத்தக்கதாக உள்ளது.
மெய்யான சிலுவையின் மிகச் சிறிய துண்டும், புனித சவேரியார்
பாதத்தின் ஒரு பகுதியும் இவ்வாலயத்தில் புனிதப் பண்டங்களாக
உள்ளன. சவேரியாரின் திருப்பண்டம் L.X பெர்னான்டஸ்
என்ற குருவின் முயற்சியால் இங்கு கொண்டுவரப்பட்டது.
இவ்வாலயத்திலுள்ள ‘கல்லறை ஆண்டவரின்’ காட்சி சிறப்பாக
உள்ளது. ‘இயேசுவின் திரு இருதயத் திருவிழா’ இவ்வாலயத்தின்
முக்கிய விழாவாகும்.

பரிசுத்த ஆவி ஆலயத்தின் கோபுரங்களும், புனித
யாகப்பர் ஆலயத்தின் கோபுரங்களும், திருச்செந்தூரிலிருந்து
கன்னியாகுமரி செல்லும் சுற்றுலாப் பயணிகளை மணப்பாட்டிற்கு
வருகை தருமாறு கவருகின்றன.

மணப்பாட்டிற்கு வடக்கில் 3 கி.மீ. தொலைவில்
குலசேகரபட்டினம் உள்ளது. இது ஒரு சிறு துறைமுகம் ஆகும்.
தூத்துக்குடி துறைமுகம் சிறப்பெய்தியதால், இத்துறைமுகம்
தனது முக்கியத்துவத்தை இழந்தது.

மணப்பாட்டிலிருந்து 25 கி.மீ தொலைவில் உவரி உள்ளது.
புனித சுவேரியார் இவ்வூருக்குக் கி.பி. 1543இல் வருகை
தந்துள்ளார். இங்குள்ள புனித அந்திரே அப்போஸ்தலர்
ஆலயம் பழமையானது. செல்வ மாதா ஆலயத்தின் கப்பல்
வடிவ அமைப்பு சிறப்புமிக்கது. புனிதப்பெல வேந்திரர் ஆலயம்
இங்குள்ள மற்றொரு முக்கிய ஆலயமாகும்.