பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்51

2. காஞ்சிபுரம்

தமிழ்நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, ஒரு பழம் பெரும்
நகரம் காஞ்சிபுரம் ஆகும். கச்சிப்பேடு, கச்சி காஞ்சி என்ற
பெயர்களும் இந்நகருக்கு உள்ளன. வேகவதி ஆற்றின் கரையில்
இந்நகரம் அமைந்துள்ளது.

தல வரலாற்றுச் சுருக்கம்

இயேசு கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே காஞ்சிபுரம் ஒரு சிறந்த நகரமாக விளங்கியிருக்கிறது.
கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பதஞ்சலி என்பவரால் இயற்றப்பட்ட
மகா பாஸ்யா
என்ற நூல், சங்க இலக்கிய நூலான
பெரும்பாணாற்றுப்படை, ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்றான மணிமேகலை ஆகியவை காஞ்சிபுரம் நகரைக்
குறிப்பிடுகின்றன. குப்தர் காலத்தில் வாழ்ந்த வராகமிகிரர்,
சீன யாத்திரீகர் யுவான் சுவாங் போன்றோர் குறிப்பிடும்
‘திராவிடத்தின்’ தலைநகராக காஞ்சிபுரம் விளங்கிற்று.
‘நகரங்களிலேயே மிகச் சிறந்தது’ என்று காளிதாசர்
காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சங்க காலத்தில் கரிகாற்சோழனின் ஆட்சிப் பகுதியாகக்
காஞ்சி இருந்தது. கரிகாலனின் மகன் தொண்டைமான்
இளந்திரையன்
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு
தொண்டை மண்டலத்தை (தற்காலச் சென்னை, செங்கற்பட்டு
மாவட்டங்கள், வட, தென் ஆர்க்காடு மாவட்டங்களின்
பகுதிகள் அடங்கியது) கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ஆட்சி
புரிந்தார் எனப்படுகிறது.

காஞ்சியில் பல்லவர் ஆட்சி

தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த சிறப்புமிக்க அரச
வம்சங்களில் பல்லவ வம்சம் ஒன்றாகும். கி.பி. சுமார் 275இல்
இவர்கள் காஞ்சிபுரத்தைத் தங்கள் தலைநகராகக்கொண்டு
தொண்டை மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தினர். கி.பி. சுமார்
875வரை 6 நூற்றாண்டுகள் காஞ்சிபுரம் பல்லவர்களின்