பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்91

7. செஞ்சிக்கோட்டை

செஞ்சி என்ற ஊர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில்
உள்ளது. திண்டிவனத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் இவ்வூர்
உள்ளது. செஞ்சியிலிருந்து 1 கி.மீ தொலைவில் செஞ்சிக்
கோட்டை உள்ளது.

கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி தமிழ்நாட்டின்
வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார்
கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள
மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார்
கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண
கோனார்
செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்
என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது
என்றும் கூறப்படுகிறது.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சி விஜய நகர
அரசின் ஆட்சியின்கீழ் வந்தது. விஜய நகர அரசுக் காலத்தில்
செஞ்சிக் கோட்டை மிக்க பலம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டது.
விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509-1529)
நாயக்கர் மரபைச் சேர்ந்த வையப்பர் என்பவரைத் தம்
பிரதிநிதியாகச் செஞ்சியில் நியமித்தார். வையப்பர் செஞ்சியைத்
தலைநகராகக்கொண்டு தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி
புரியலானார் (1526). இவர் விஜய நகர மன்னர்களிடம் விசுவாசமாக
நடந்துகொண்டார். வையப்பரை அடுத்து துபாகி கிருஷ்ணப்பர்
என்பவர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர் ஆனார். துபாகி
கிருஷ்ணப்பர் காலத்தில் அனந்தகிரிக் கோட்டை ‘இராஜகிரிக்
கோட்டை’
என்ற பெயரைப் பெற்றது. இவர் இராஜகிரி
மலையில் கொத்தளங்கள், தானியக் களஞ்சியங்கள், மூன்று
குன்றுகளைச் சுற்றியுள்ள மதில்கள் ஆகியவற்றைக் கட்டினார்.
இவரையடுத்து முதலாம் கிருஷ்ணப்பர், இரண்டாம்
கிருஷ்ணப்பர் ஆகியோர் செஞ்சி நாயக்க அரசின்
ஆளுநர்களாக இருந்தனர்.