| வந்தன. மன்னரின் கல்வி, கலைத்திறன், அவர்களுடைய விருப்பு வெறுப்புகள், அவர்கள் புரிந்துகொண்ட திருமணங்கள், நிகழ்த்திய போர்கள், கண்ட வெற்றி தோல்விகள் ஆகியவற்றையே வரலாற்று ஆசிரியர்கள் தம் நூல்களில் குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டு அவர்களுடைய செங்கோன்மை அல்லது கொடுங்கோன்மையின் விளைவாக ஏற்படும் இன்ப துன்பங்களை நுகர்பவர்கள் நாட்டின் குடிமக்களாவர். காலச் சுழற்சியில் ‘வரலாறு’ என்னும் சொல்லுக்குப் புதிய விளக்கங்கள் எழுந்தன. உலகில் மக்களிடையே விஞ்ஞானம், தொழில், தொழில்நுட்பம், தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் கருத்துப் புரட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மக்கள் சமுதாயத்தின் வரலாற்றில் அரசர்களும் அரசியலும் ஏற்கும் பங்கு ஒரு சிறிதளவுதான். மக்கள் வாழ்க்கை பலதுறைப் பட்டது ; பன்முக வைரமணி போன்றது. ஆகையால், அரசாங்க வரலாறு மட்டுமன்றி மக்களின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றியும் அறிந்துகொள்ளுவது சாலச் சிறந்ததாகும். மக்கள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் பல உண்டு. பசி என்பது மனிதனின் அடிப்படையான, அடக்க முடியாத உணர்ச்சியாகும். பசியாற்றிக்கொள்ளும் பெரு முயற்சியில் மனிதன் இடைவிடாது உழன்று கொண்டிருக்கிறான். இம் முயற்சியை விளக்கிக் கூறுவது ‘பொருளியல்’ என்பதாகும். உலகில் சமயங்கள் பல தோன்றி வளர்ந்து வந்துள்ளன ; பல மறைந்துபோயுள்ளன. மக்கள் சமயங்களில் கொண்டுள்ள ஈடுபாட்டை எடுத்துக் கூறுவது ‘சமய வரலாறு’. நாட்டின் மொழி வளர்ச்சியையும், இலக்கிய வளர்ச்சியையும், கருத்துப் புரட்சிகளையும் எடுத்துக் கூறுவது ‘இலக்கிய வரலாறு’ ஆகும். அரசர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை மட்டும் விளக்கிக் கூறும் வரலாறுகள் இன்று செல்வாக்கிழந்துவிட்டன. மன்னர்கள் ஒருவரோடொருவர் பூசலிட்டுப் போராடி, மாண்டுபோன செய்திகள் மக்கள் மனங்களுக்குப் புளித்துவிட்டன. நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடுகள் முதலியவற்றைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வரலாற்று ஆய்வாளரிடம் ஆவல் மேலிட்டு வருகின்றது. வரலாற்று நூல்கள் எழுதுவதில் புதிய முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. நாட்டின் இயற்கை யமைப்பு, இயற்கை வளங்கள், இவற்றுடன் அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கை இயல்புகளுக்கு ஏற்பட்டுள்ள |